×

மக்களின் அன்றாட தேவைகளை அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும்: களஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மக்களின் அன்றாட தேவைகளை அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என விழுப்புரத்தில் நடந்த களஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாட்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். 2வது நாளாக நேற்று நடந்த கள ஆய்வில், கலெக்டர்கள், அரசு உயரதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: கோட்டையில் அமர்ந்து திட்டங்களைத் தீட்டினால் போதும், பணிகள் தானாக நடந்து விடும் என நினைக்காமல், மக்களுக்கு நெருக்கமாகச் சென்று, அரசால் வகுக்கப்பட்ட திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் துவக்கப்பட்டது. முதன்முதலாக வேலூருக்கு சென்ற போது நடத்திய ஆய்வுக்கும், அடுத்தடுத்த மாவட்டங்களில் நடைபெறும் ஆய்வுக்கும் வித்தியாசத்தை பார்க்கிறேன். என்ன மாதிரியான கேள்விகளை முன்வைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு மற்ற மாவட்டத்தில் அதனை முன்கூட்டியெ முடித்து வைத்திருக்கிறார்கள்.

முதல்வர் நமது மாவட்டத்துக்கு வந்தால் இதையெல்லாம் கேட்பார் என்று நினைத்து செயல்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனை துரிதமான நடவடிக்கையாகவே பார்க்கிறேன். உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது, அறிவிக்கப்பட்ட திட்டம் விரைந்து துவக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். எல்லாப்பணிகளும் தரமானதாக, முழுமையானதாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதனைத்தான் மாவட்ட கலெக்டரிடமும், மாவட்ட நிலை அலுவலர்களிடமும் எதிர்பார்க்கிறோம். அதற்குத் தேவை தொடர் கண்காணிப்பு, கோட்டையில் எனது அறையில் டேஷ்போர்டு வைத்துள்ளேன். ஒவ்வொரு திட்டமும் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அவ்வப்போது அறிந்து வருகிறேன்.

அதேபோல் மாவட்ட அளவிலும் அத்தகைய கண்காணிப்பு மிகமிக அவசியம். கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை வேகப்படுத்துங்கள். வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிகளை கவனமாக தேர்ந்தெடுத்து பணிக்கு வருபவர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்குங்கள். 15வது நிதிக்குழு மானியப் பணிகளை விரைவாக முடித்திடவும் அறிவுறுத்த விரும்புகிறேன். மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய திட்டங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குடிநீர், மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த்துறை வழங்க வேண்டிய பட்டா உள்ளிட்ட சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சாலை மேம்பாடு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், அதற்கான திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றுதல், இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் கல்வி, அரசு மருத்துவமனையில் தரமான மருத்துவ சிகிச்சையில் தொடர்ந்து கவனம் செலுத்துவது மக்களுக்கு நல்ல பயனை தரும்.

வேளாண்மைத்துறையை பொறுத்தவரை, இந்த அரசு அறிவித்த முக்கியமான திட்டம், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அதன் செயலாக்கத்தில் பலதுறைகளின் பங்களிப்பு தேவைப்படுகின்றது. இத்திட்டத்தில் பணி திருப்திகரமாக இருக்கும் வகையில் செயல்பட வேண்டும். மூன்று மாவட்டங்களும் விவசாயம் சார்ந்த மாவட்டங்கள் என்பதால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்குதல் ஆகியவற்றில் துறை செயலர், மாவட்ட ஆட்சியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன். மக்கள் நல்வாழ்வுத்துறையை பொறுத்தவரை, குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவது கண்காணிக்கப்பட வேண்டும்.

ஆய்வுக் கூட்டத்தின் போது சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் காணப்பட்டது. நான் எந்தத் துறையையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. அளிக்கப்பட்ட நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்காக, திட்டத்திற்காக செலவிடுவது தான் திறன்மிகு நிர்வாகமாகும். அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களை அரசிற்குச் சொல்லி முன்மொழிவுகள் அனுப்புங்கள். அரசு உங்கள் நல்ல பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மக்களின் அன்றாட தேவைகளை அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும்: களஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,M.K.Stalin ,Villupura ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...