×

ரூ.908 கோடி மோசடி; டான்ஜெட்கோ அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை: ரூ.360 கோடி வைப்பு நிதி பற்றிய ஆவணங்கள் சிக்கின..!!

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக டான்ஜெட்கோ அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சோதனையில் அதிகாரிகள் வீடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த 24ம் தேதி டான்ஜெட்கோ அதிகாரிகள் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னையில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் மின்வாரிய அதிகாரிகளிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

ரூ.360 கோடி வைப்பு நிதி பற்றிய ஆவணங்கள் சிக்கின:

அமலாக்கத்துறை சோதனையில் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் வசமிருந்து ரூ.360 கோடி நிரந்தர வைப்பு தொடர்பான ஆவணங்கள் சிக்கின.

நிலக்கரி கொண்டுவரும் செலவில் ரூ.908 கோடி மோசடி:

2011-ல் இருந்து 2016 வரை விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டுவந்த வகையில் ரூ.908 கோடி மோசடி என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மோசடி புகாரின் பேரில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 2018-ல் அறப்போர் இயக்கம் அளித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. லஞ்ச ஒழிப்புத்துறையை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது.

யார் யார் மீது வழக்கு?

டான்ஜெட்கோ முன்னாள் தலைமை பொறியாளர் பழனியப்பன், அதிகாரி மனோகரன், பொறியாளர்கள் நரசிம்மன், ஸ்ரீனிவாச சங்கர் ஆகியோர்கள் முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி போக்குவரத்துச் செலவு மோசடி விவரம்:

2011-ல் இருந்து 2016 வரை தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டு வர ரூ.1,267 கோடி செலவிட்டதாக டான்ஜெட்கோவால் கணக்கு காட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில், நிலக்கரி கொண்டு வந்த வகையில் ரூ.237 கோடி மட்டுமே செலுத்தப்பட்டது அம்பலமானது. நிலக்கரி ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களுக்கு அளித்த ஊதியத்திலும் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் சவுத் இந்தியா கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

சவுத் இந்தியா கார்ப்பரேஷனுடன் செய்த ஒப்பந்தப்படி அந்நிறுவனத்துக்கு டான்ஜெட்கோ ரூ.1,000 கோடிக்கு மேல் கட்டணம் செலுத்தியுள்ளது. புகாருக்கு ஆளான அதிகாரிகள் அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்ததால் முறைகேடு வழக்குக்கு முட்டுக்கட்டை போட்டனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தீவிரப்படுத்தி மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது.

The post ரூ.908 கோடி மோசடி; டான்ஜெட்கோ அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை: ரூ.360 கோடி வைப்பு நிதி பற்றிய ஆவணங்கள் சிக்கின..!! appeared first on Dinakaran.

Tags : DANJETCO ,Chennai ,AIADMK ,Tamil Nadu.… ,Dinakaran ,
× RELATED பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பு...