×

ஆதம்பாக்கம் பஜார் சாலை ஆக்கிரமிப்பு: இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த கருணிகர் தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. இதனால் அந்த பஜார் சாலையின் அகலம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் கருணீகர் தெரு, மிக பழமையான பஜார் சாலையாகும். ஜவுளி, நகைக் கடைகள், பல்பொருள் அங்காடி, ஓட்டல்கள், பேன்சி கடைகள் நிறைந்த வர்த்தக பகுதியாக திகழ்ந்து வருகிறது. சுமார் 30 அடி அகலம் கொண்ட இந்த பஜார் சாலையை தற்போது சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்து, கடை பரப்பி மாலை நேரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலையின் அகலம் 15 அடியாக சுருங்கிவிட்டது. அவ்வழியே இருசக்கர வாகனங்கள் கூட சென்று வரமுடியாத நிலை நீடித்து வருகிறது.

இதுதவிர, அங்குள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்பட எந்த வணிக நிறுவனத்திலும் கார் பார்க்கிங் வசதி கிடையாது. அங்கு வருபவர்கள் பஜார் சாலையிலேயே தங்களது வாகனங்களை நீண்ட நேரத்துக்கு நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஜார் சாலையில் பொருட்களை வாங்க மக்கள் நடந்து செல்லக்கூட இடமின்றி தவிக்கின்றனர். இதனால் ஆதம்பாக்கம் பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, ஆதம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க, பஜார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த சாலையின் அகலத்தை அதிகரித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஆதம்பாக்கம் பஜார் சாலை ஆக்கிரமிப்பு: இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை appeared first on Dinakaran.

Tags : Adambakkam Bazar road ,ALANTHUR ,Karunigar Street ,Adambakkam ,Bazar Road ,Dinakaran ,
× RELATED சென்னை அடையாறு, பெருங்குடி,...