×

கும்மிடிப்பூண்டி அருகே வட்டாட்சியரை அவதூறாக பேசிய 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தன்னை அவதூறு செய்ததாக வட்டாட்சியர் அளித்த புகாரின்பேரில், இன்று அதிகாலை இருவேறு வழக்குகளில் தொடர்பு உடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கும்மிடிப்பூண்டி அருகே காயலார்மேடு கிராமத்தை சேர்ந்தவர் நந்திவர்மன் (27). இவர், ஆந்திர பல்கலைக்கழகம் ஒன்றில் வழக்கறிஞர் பணிக்காக 3 ஆண்டு எல்எல்பி படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நந்திவர்மன், புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் ஆகிய இருவரும் வந்தனர். அங்கு தங்களை வழக்கறிஞர்கள் என அறிமுகம் செய்து கொண்டு, அலுவலக உதவியாளர் வேலாயுதத்தை அவதூறாக பேசியுள்ளனர்.

பின்னர் வட்டாட்சியர் பிரீத்தியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை இருவரும் அவதூறாக பேசியதுடன், அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ படமெடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவவிட்டு உள்ளனர். மேலும், இதுதொடர்பான வீடியோவை வட்டாட்சியரின் செல்போனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து மறுநாள் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் வட்டாட்சியர் பிரீத்தி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்திவர்மன் மற்றும் வழக்கறிஞர் ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். இதேபோல் வட்டாட்சியரை பணி செய்யவிடாமல் அவதூறாக பேசிய மற்றொரு புகாரின்பேரில், பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா (30) மற்றும் அவருடன் வந்த நான்கு பேர் மீதும், மேலும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முன் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட எளாவூர் அருள் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை தலைமறைவாக இருந்த இருவேறு வழக்குகளில் தொடர்புடைய எல்எல்பி படிக்கும் நந்திவர்மன், பெரிய ஓபுளாபுரம் சத்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, கைது செய்யப்பட்ட நந்திவர்மன், தலைமறைவாக இருக்கும் வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் ஆகிய இருவரும் நாம் தமிழர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர் என குறிப்பிடத்தக்கது.

The post கும்மிடிப்பூண்டி அருகே வட்டாட்சியரை அவதூறாக பேசிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kummipipundi ,Kummhipundi ,Gummipundi ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...