×

மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு பொன் தாலி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு; 2 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்..!!

சென்னை: 2023 – 24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு பொன் தாலி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து , 2 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடத்தி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2023 – 24ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு பொன் தாலி வழங்கும் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை, கோயம்பேடு, அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்து, 2 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடு, புதிதாக இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தி வந்தாலும் திருக்கோயில் சொத்துக்களை காத்தல், திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு மேற்கொள்தல், திருத்தேர்கள், திருக்குளங்களை பராமரித்தல், முடி காணிக்கை மண்டபங்கள், பக்தர்கள் தங்குமிடங்கள், விருந்து மண்டபங்களை மேம்படுத்துதல் மற்றும் திருமண மண்டபங்களை கட்டுதல் என்று பல்வேறு முனைப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு நலம் பெற, வளம் பெற பல்வேறு நடவடிக்கைகளை பல்வேறு துறைகள் வாயிலாக செயல்படுத்தி வருகின்ற முதலமைச்சர், திருக்கோயில்களின் சார்பிலும் மாற்றத்திறனாளிகளுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த ஆண்டு திருக்கோயிலில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு புத்தாடைகள் வழங்கியதோடு திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெற்றால் கட்டணம் இலவசம் என்று அறிவித்து செயல்படுத்தினார். இந்த ஆண்டிற்கான (2023-2024) அறிவிப்பில், திருக்கோயில்களில் திருமணம் செய்து கொள்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் பொன் தாலி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை உடனடியாக நிறைவேற்றுகின்ற வகையில் இன்றைய தினம் 2 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலியை இலவசமாக அவர்களிடம் வழங்கிய போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அதோடு சேர்த்து அவர்களுக்கு புத்தாடைகளும், சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன. இந்த திருமண ஜோடிகள் தமிழக முதல்வர் நல்லாசியோடு பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனின் இயற்கையும் வேண்டுகிறேன். மதுரை சித்திரைப் பெருவிழாவை பொறுத்த அளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை தரிசனம், திக் விஜயம், பட்டாபிஷேகம் என 6 நிகழ்வுகள் இருந்தாலும் அதில் திருக்கல்யாணம், திருத்தேர் உலா, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது போன்ற நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டார்கள்.

அதற்கிணங்க நேற்றைய தினம் அம்மாவட்ட அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களின் கூட்டத்தினை நடத்தினோம். அதில் மக்களுக்கு தேவையான அளவிற்கு மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போதுமான மின் விளக்குகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பெருமளவில் காவலர்கள் எண்ணிக்கை அதிகரித்தல், தேர் பவனிவரும் வீதிகளில் மின்சார வயர்களை ஆய்வு செய்தல் போன்றவை குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. திருக்கல்யாணம் நடைபெறுகின்ற இடத்தையும், திருத்தேர் உலா வருகின்ற வீதிகளையும், திருக்கோயில் யானை பார்வதியின் பராமரிப்பையும் பார்வையிட்டோம்.

திருத்தேருக்கு பொதுப்பணித்துறையின் சான்றிதழ் பெறப்பட்டு இருக்கின்றதா? திருத்தேர் ஆண்டுக்கு ஒரு முறை உலா வருவதால் தேர் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் கள்ளழகர் ஆற்றிலே இறங்குகின்ற இடம் முழுமையாக தூய்மை செய்தல், அருகிலுள்ள பூங்காக்கள் போன்ற அனைத்து பொழுதுபோக்கு இடங்களையும் திறந்து வைப்பது என்றும் இந்தாண்டு திருக்கல்யாணத்திற்கு 12,000 பக்தர்களை அனுமதிக்கவும் முடிவெடுத்துள்ளோம்.

மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் எந்தெந்த ஊரிலிருந்து அதிகமாக மக்கள் வருவார்கள் என்று கணக்கிடுவதோடு, தொன்றுதொட்டு மாட்டு வண்டியில் வருபவர்கள் எந்த இடத்தில் அந்த வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும், முக்கியபிரமுகர்களின் வாகனங்களுக்கு வாகன அனுமதி சீட்டு வழங்கப்பட்டு அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் தனித்தனையே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு சித்திரை பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. எம்.வி.பிரபாகர் ராஜா, சென்னை மண்டல இணை ஆணையர் திருமதி கி. ரேணுகாதேவி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் திரு.பி. செம்மசந்திரன். திருக்கோயில் செயல் அலுவலர் திரு. கேசவராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு பொன் தாலி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு; 2 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Segarbabu ,Chennai ,24th Assembly Announcement ,Bon ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...