×

திருச்செந்தூர் கோயிலில் 3 ஆண்டில் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் மேற்கு ராஜகோபுர திருப்பணிக்கான பாலாலய பணி மற்றும் பந்தல் கால் நாட்டு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள், ஷவருடன் கூடிய யானைக்கான குளியல் தொட்டியை திறந்து வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் டெல்லியில் அமைந்துள்ள வாமசுந்தரி அசோசியேஷன் நிறுவனம் சார்பில் ரூ.206.45 கோடியில் 18 பணிகளும், அறநிலையத்துறை சார்பில் ரூ.90.90 லட்சம் மதிப்பில் 18 பணிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ஒரு லட்சம் சதுர அடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயில் சார்பில் 3 லட்சம் சதுர அடியும், வாமசுந்தரி அசோசியேஷன் சார்பில் 3 லட்சம் சதுர அடியும் பணிகள் நடைபெற இருக்கின்றன. இதில் துவக்கப்பட்டு இருக்கின்ற ஒரு லட்சம் சதுர அடியில் 14 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கிழக்கு கோபுர பாலாலயம் நடைபெற்றது. தற்போது ராஜகோபுர வாசல் திருப்பணிகள் பாலாலயம் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது.

கோயில் உள்ளே இருக்கின்ற கொடிமரம் உள்பட ரூ.16.40 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதோடு யானைகள் மகிழ்ச்சியாக இருக்க ரூ.30 லட்சம் செலவில் குளியல் தொட்டி கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அல்லாமல் திருக்கோவில் சார்பில் இருக்கின்ற 3 உபகோயில்களுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த பகுதியில் ஒரு நந்தவனம் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் கடலில் நீராட ரூ.50 லட்சம் செலவில் நடைபாதை பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இதுபோன்று 4 பணிகள் மற்றும் 3 திருக்கோயில்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 7 பணிகளுக்கு ரூ.6 கோடி இந்த ஆண்டு நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் 12 ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 714 திருக்கோயில்கள் பராமரிப்பதற்கு கடந்த ஆண்டு ரூ.100 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டு 116 பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்த ஆண்டும் ரூ.100 கோடி வழங்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 3 கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி, நிர்வாக அலுவலகம், கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும். 2025ம் ஆண்டுக்குள் குடமுழுக்கு நடைபெற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. யாத்திரிகர் நிவாஸ் கட்டுவதற்கு ரூ.19 கோடி மதிப்பில் விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருச்செந்தூர் கோயிலில் 3 ஆண்டில் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Tiruchendur ,Minister ,Shekharbabu ,Tiruchendur Subramania Swamy Temple ,Balalaya ,West Rajagopura ,Tirupani ,Tiruchendur temple ,Shekhar Babu ,
× RELATED காஞ்சிபுரத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு...