×

திநகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதை மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு!!

சென்னை : தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதை மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மாநகரில் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக தி.நகர் திகழ்கிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது. இந்நிலையில், பாதசாரிகள் வசதிக்காக, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையத்திற்கு ஆகாய நடைமேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்மூலம் ஓரளவு நெரிசலை குறைக்கலாம் என திட்டமிடப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன.  இது 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். 15 மாதங்களில் பணிகளை முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை ஏற்படுத்தியது. ஊழியர்கள் சரிவர பணிக்கு வராதது, ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை, மேம்பால திட்ட வடிவமைப்புகளில் செய்யப்பட்ட மாற்றம் போன்ற விஷயங்களால் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஆண்டு பாதியில் இருந்து பணிகள் வேகமெடுத்தன. தற்போது, பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுமே மாதம் முதல் வாரத்தில் திறப்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, “தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதை பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தயார் நிலையில் உள்ளது. மாம்பலம் ரயில் நிலையத்தை மேட்லி சந்திப்புக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தை இணைக்கும் 570 மீட்டர் நீளம், 4.2 மீட்டர் அகலமுள்ள இந்த அழகிய நடைபாதை மேம்பாலத்தின் இரு முனைகளிலும் லிஃப்ட், பேருந்து நிலைய முனையில் ஒரு எஸ்கலேட்டர், மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு, பொது முகவரி அமைப்பு மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திநகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதை மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : India ,Dinagar ,Chennai ,Thiagaraya ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை