×

பெரியகுளத்திலிருந்து-வடுகபட்டி வழியாக தேனி ஜிஹெச்சிற்கு அரசு பஸ் இயக்கப்படுமா: கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

பெரியகுளம்: பெரியகுளத்திலிருந்து-வடுகபட்டி வழியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல அரசு பஸ் இயக்கப்பட வேண்டும் என கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் போக்குவரத்துக்கான பஸ்களை இயக்கும் முக்கிய துறை தமிழக அரசின் போக்குவரத்துத் துறையாகும். தனியார் வசம் இருந்த இத்துறை கடந்த 1972 முதல் தமிழக அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒருசில பகுதிகளுக்கும் தமிழ்நாட்டிலிருந்து பஸ்களை இயக்குகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, சேலம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் என 8 தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் மதுரை மண்டலமானது, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பகுதிகளுக்கும் பஸ்களை இயக்குகிறது. தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம் 1, கம்பம் 2, குமுளி, தேவாரம், போடி என 6 பணிமனைகளிலிருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பெரியகுளம் தாலுகாவில் பெரியகுளம் நகராட்சி, தாமரைக்குளம், தென்கரை, வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய 5 பேரூராட்சிகளும், 17 கிராம ஊராட்சிகளும் உள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நோய், உடல் கோளாறு, பிரசவம், உடல்நிலை சரியில்லை என்றால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று வருகின்றனர். மேல் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதுமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சென்று வருகின்றனர். அதே வேளையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அங்கிருந்து நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் பெரியகுளம் பேருந்து நிலையம் செல்கின்றனர். அதன்பின், தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று மீண்டும் தேனி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இதனால், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு வீண் அலைச்சலும், பொருளாதார விரயமும் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் 2, 3 பஸ்கள் மாறிச் செல்வதால் நோயாளிகளும் அவரது உறவினர்களும் மிகுந்த அலைச்சலுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், எண்டப்புளி, பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் பெரியகுளம் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பஸ் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி உள்ளதால் வாடகை வாகனங்களில் செல்ல முடியாமல் நோயாளிகளை வைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். மேலும் மழை மற்றும் வெயில் காலங்களில் நோயாளிகளையும் அவரை பார்க்கச் செல்லும் உறவினர்களும் பேருந்துகளில் மாறி மாறி செல்வதால் மிகுந்த பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு தேவதான பட்டியிலிருந்து சில்வார்பட்டி வழித்தடத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து இயக்கப்பட்டது. அது பெரியகுளம் பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோன்று தமிழ்நாடு அரசும் போக்குவரத்து துறையும் பெரியகுளம் பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று பெரியகுளத்தில் இருந்து வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்களம், வைகை அணை, க.விலக்கு வழித்தடத்தில்-தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பஸ் இயக்க வேண்டுமென பெரியகுளம் பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார். இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி மாவட்டத்தில் ரூ.பல ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் போடி, பெரியகுளம், கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம், அரசு பள்ளி கட்டிட பணிகள், புதிய வகுப்பறை கட்டும் பணிகள், பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருகிறது. எனவே, தமிழக அரசு பெரியகுளம் பகுதி மக்களின் நலன் கருதி பெரியகுளத்தில் இருந்து வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்களம், வைகை அணை, க.விலக்கு வழித்தடத்தில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து விசிக ஒன்றிய செயலாளர் ஆண்டி கூறியதாவது, ‘‘பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதால் வீண் அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகிறது. இப்பகுதியில் ெபரும்பாலும் விவசாயத் தொழிலில் சார்ந்து இருப்பதால் வாடகை வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம் வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்க வேண்டும்’’ என்றனர்.

The post பெரியகுளத்திலிருந்து-வடுகபட்டி வழியாக தேனி ஜிஹெச்சிற்கு அரசு பஸ் இயக்கப்படுமா: கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Theni GH ,Periyakulam-Vadugapatti ,Periyakulam ,Vadugapatti ,Theni Government Medical College Hospital ,
× RELATED மகாசிவராத்திரியை முன்னிட்டு...