×

வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றுப்படுகையில் 1000 ஆண்டுகள் பழமையானது ராஜராஜ சோழன் கட்டிய சோமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்: மரகத கல் கோபுர கலசத்துடன் வியக்க வைக்கும் சிற்பக்கலைகள்

* 2016ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறாத பங்குனி மாத பிரம்மோற்சவம்

வேலூர்: பொன்னை ஆற்றுப்படுகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமைமை வாய்ந்த, ராஜராஜ சோழன் கட்டிய சோமநாதீஸ்வரர் கோயிலை சுற்றுலா தலமாக்க வேண்டும். சிற்பக்கலைகளை உலகறியச் செய்ய வேண்டும். அதோடு கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை ைவத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த மேல்பாடி கிராமத்தில் பொன்னை ஆற்றுப் படுகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கால கைவண்ணத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சோமநாதீஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதன் சுற்றுச்சுவர் 30 அடி உயரம் 3 அடி அகலத்தில் அமைத்துள்ளனர்.

இக்கோயிலில் உள்பிரகாரத்தில் விநாயகர் நாக யக்ஞோயப கணபதியாக வீற்றிருக்கிறார். அம்மன் தபசுகிருதாம்பாள் அவதாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மேலும் இக்கோயில் உள்பிரகாரத்தில் சப்தமாதர்களின் கற்சிலைகள் பல்லவர் கால கலைவண்ணத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும். மேலும் இக்கோயிலில் மூலவர் சோமநாதீஸ்வரராக மரகத லிங்கத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இக்கோயில் மூலவர் கோபுரம் மீது பச்சை நிற மரகதக் கல்லால் ஆன கலசம் வடிவமைத்துள்ளது பெரும் சிறப்பு. மேலும் நவக்கிரக சிலைகள், நந்தி சிலை மற்றும் பெரிய கொடிமரத்துடன் மிகப் பிரமாண்டமாக இத்திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. எனவே இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

மேலும் 100 வருடங்களுக்கு பிறகு கடந்த 2016ம் ஆண்டு பங்குனி மாத பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதில் மலை கொடி சத்தியமா மற்றும் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்றுள்ளது. அதன்பிறகு பிரமோற்சவம் நடைபெறவில்லை. எனவே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நடத்தப்பட வேண்டும். ராட்சத கற்தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள 16 கால் மண்டபம் அனைவரையும் கவர்கிறது. சோழர் கால கைவண்ணத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அரிய சிற்பக்கலைகளை உலகறியச் செய்யும் வகையில் இந்த பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இக்கோயிலுக்கு தெற்கு பகுதியில் ராஜராஜ சோழனின், பாட்டனார் அருஞ்செழிய சோழன் சமாதி உள்ளது. இங்கு சோழர்களின் கைவண்ணத்தில் கற்சிலைகளால் வடிவமைக்கப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கின்றது.

மேலும் அருஞ்செழிய சோழன் நினைவிடம் அமைந்துள்ள பிரகாரத்தில் அருந்திரீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு காட்சி அளிக்கின்றது. இங்கே சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் சூரிய பகவான் சிவலிங்கம் மேனி மீது விழும் படியாக கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் புரட்டாசி மாதத்தில் நடைபெறுகின்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ திருவிழா நடத்த வேண்டும். ராஜ ராஜ சோழனின் பாட்டனார் அருஞ்செழிய சோழன் நினைவிடம் சிதிலமடைந்துள்ளது. அதனை புனரமைத்து பாதுகாக்க வேண்டும். அங்குள்ள அருந்திரீஸ்வரர் கோயிலையும் திறந்து புனரமைத்து வழிபாட்டிற்கு ெகாண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சோமநாதீஸ்வரர் கோயிலில் முருகனுக்கு சிலை தனியாக வைக்கப்படவில்லை. ஏனெனில் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனை வணங்கி விட்டு சோமநாதீஸ்வரர் சிவன் கோயிலில் உள்ள மூலவரை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாக கூறப்படுகின்றது. இதனால் வள்ளிமலை கோயில் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பிரம்மோற்சவம் சோமநாதீஸ்வரர் கோயிலிலும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பில் கொண்டு வந்து பிரம்மோற்சவம் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* தடைபட்ட ராஜ கோபுரம் பணி

சிவன்கோயில்கள் அனைத்திலும் ராஜகோபுரங்கள் இருக்கும். ஆனால் பொன்னையாற்றங்கரையில் அமைந்துள்ள பிரமாண்ட சோமநாதீஸ்வரர் கோயிலில் முகலாயர்கள் படையெடுத்து வந்தபோது, இக்கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தடைபட்டது. அதன்பிறகு தற்போது வரையில் சோமநாதீஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம் இல்லாமலேயே உள்ளது. எனவே இக்கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்ைக எழுந்துள்ளது.

* கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோமநாதீஸ்வரர் கோயில் கோபுரத்தின் மீது உள்ள மரகதக்கல் கலசத்தை 2 முறை திருடுவதற்கு மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர். மேலும் பாதுகாப்பும் கேள்விற்குறியாக உள்ளதால், சோமநாதீஸ்வரர் கோயில் பகுதிகளில் உடனடியாக கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். அதோடு இரவு நேரத்தில் உள்ளதை போல், பகல் நேரங்களிலும் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.

* பூசாரிகளுக்கு மாத சம்பளம்

பொன்ைனயில் உள்ள ேசாமநாதீஸ்வரர் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தாலும் உபயதாரர்கள் மூலம் 3 கால பூஜை காலை, மதியம், மாலை என்று நடைபெறுகிறது. எனவே வழக்கமாக சிவன் கோயில்களில் நடைபெறுவதைபோல 4 கால பூஜையோ, 6 கால பூஜையோ நடத்த வேண்டும். இங்கு பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாத சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றுப்படுகையில் 1000 ஆண்டுகள் பழமையானது ராஜராஜ சோழன் கட்டிய சோமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்: மரகத கல் கோபுர கலசத்துடன் வியக்க வைக்கும் சிற்பக்கலைகள் appeared first on Dinakaran.

Tags : Somanatheeswarar Temple ,Rajaraja Cholan ,Ponnai River ,Vellore District ,Panguni Month Brahmotsavam ,Vellore ,Somanadeeswarar temple ,Rajaraja ,Chola ,
× RELATED தஞ்சாவூரில் மொபட் திருடியவர் கைது