×

கீழடி உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை பார்வையிடலாம் ரூ.300க்கு உணவுடன் ஒருநாள் சுற்றுலா: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

விருதுநகர்: தமிழரின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு மற்றும் தொன்மையான நாகரிகத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விருதுநகர் மாவட்ட சுற்றுலாத்துறை ரூ.300க்கு மதிய உணவுடன் ஒருநாள் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கீழடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் விதமாக ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், பாரம்பரிய மரபு சின்னங்கள், வரலாற்று சிற்பங்கள் மற்றும் தொன்மையான நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றையும், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை கண்டுகளிப்பதற்கும், பழங்கால தமிழர்களின் வாழ்வியல் முறைகள், வேளாண்மையும் நீர் மேலாண்மை, வணிக மேலாண்மை, கடல் வணிகம், தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு ஆகியவற்றை விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அறிந்து தெரிந்து கொள்வதற்கும் சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒருநாள் கீழடி சுற்றுலா, ஒருநாள் பாரம்பரிய மரபு பயணம் மற்றும் ஒருநாள் உள்ளூர் சுற்றுலா ஆகிய சுற்றுலாக்கள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. கீழடி அருங்காட்சியகம் மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு ஒருநாள் சுற்றுலா, இதே போல் ஒருநாள் பாரம்பரிய மரபு பயணம் என்ற பெயரில் விருதுநகர் மாவட்டம் மூவரைவென்றான் குடவரைக் கோவில், குன்னூர் குத்துக்கல், கல்தூண் மண்டபங்கள், நடுகற்கள், பெருங்கற்கால நினைவிடங்கள், நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கும், மற்றொரு ஒருநாள் உள்ளூர் சுற்றுலாவில், செண்பகத்தோப்பு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இவற்றில் விரும்பியவற்றை சுற்றுலா செல்ல விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளலாம். வாரந்தோறும் சனிக்கிழமை இந்த சுற்றுலாக்களுக்கு செல்லலாம். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, மாலை 6 மணிக்கு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஒரு நபருக்கு மதிய உணவு உட்பட ரூ.300 மட்டுமே. இந்த சுற்றுலாக்களில் விருப்பமுள்ள சுற்றுலாவினை பயணிகள் தேர்வு செய்து மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் சுற்றுலாத்துறை மூலம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களில் உள்ள க்யூஆர் கோடு மூலம் கட்டணத்தை செலுத்தலாம். அல்லது 93619-93400 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கியூஆர் கோடை பெற்றோ அல்லது 9361993400 @ Paytm என்ற UPI IDக்கும் பணம் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய விபரம் பெயர் மற்றும் முகவரியினை 93619-93400 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 73977-15688 என்ற எண்ணில் சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

The post கீழடி உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை பார்வையிடலாம் ரூ.300க்கு உணவுடன் ஒருநாள் சுற்றுலா: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Geezadi ,District Administration ,Virudhunagar ,Virudhunagar District Tourism Department ,
× RELATED காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை: போடியில் 6 கடைகளுக்கு அபராதம்