×

கிராம நிர்வாக அதிகாரி கொலை எதிரொலி மணல் கடத்தல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பேட்டி

 

நாகர்கோவில், ஏப்.27: குமரியில் மீட்கப்பட்ட ₹56 லட்சம் மதிப்பிலான செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், வி.ஏ.ஓ. கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள். அந்த வகையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட சுமார் 405 செல்போன்கள் கடந்த 4 மாதங்களில் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ₹56 லட்சம் இருக்கும். இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : கடந்த 1 வருட காலத்தில், சுமார் 1900 செல்போன்கள் மாயமானதாக புகார் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவற்றில் முதற்கட்டமாக 340 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. 2 வது கட்டமாக சுமார் 400 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்காக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்த சைபர் க்ரைம் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெளி மாநிலங்களில் இருந்து கூட செல்போன்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது கஞ்சா வரத்து குறைந்து இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா வருவதை தடுக்கும் வகையில் சோதனை சாவடிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தூத்துக்குடியில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கஞ்சா விற்பனை தொடர்பாக முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். தற்போது பெரிய அளவில் கஞ்சா விற்பனை இல்லை என்றாலும் கூட ஒரு சில பகுதிகளில் சிறிய அளவில் விற்பனை நடைபெறுவதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன. இதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வி.ஏ.ஓ. வுக்கு மிரட்டல் தொடர்பாக இவர்களை ஏற்கனவே காவல்துறையினர் தேடி வந்தனர். இவர்கள் கேரளாவில் தலைமறைவாக இருந்திருக்கிறார்கள்.

அங்கிருந்து வந்து தான் இந்த சம்பவத்ைத செய்துள்ளனர். கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். மணல் கடத்தல், கஞ்சா விற்பனை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் நெல்லை சரகத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். பேட்டியின் போது எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன், பயிற்சி ஏ.எஸ்.பி. கேழ்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, டி.எஸ்.பி.க்கள் தங்கராமன், நவீன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டெல்லி வரை சென்று மீட்கப்பட்ட செல்போன்கள்
தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் தான் மாயமான செல்போன்கள் அதிகளவில் மீட்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் செல்போன்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இன்று ஒப்படைக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட செல்போன்களில் 30 சதவீத செல்போன்கள் வெளிமாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டவை ஆகும். டெல்லி, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்து செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் தனிப்படை எஸ்.ஐ. சம்சீர், போலீசார் டேவிட், அஜிஸ் ஆகியோருக்கு பரிசு வழங்கியும் டிஐஜி பாராட்டினார்.

பழைய செல்போன்களை வாங்கும் போது கவனம் தேவை
எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் கூறுகையில், பொதுமக்கள் தெரியாத நபர்களிடமிருந்து பழைய செல்போன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அது குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட செல்போனாக இருக்கலாம். எனவே பழைய செல்போன்களை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். செல்போன்களை தவற விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் https://eservices.tnpolice.gov.in என்ற இணைய தளத்தில் புகார் பதிவு செய்யலாம் என்றார்.

The post கிராம நிர்வாக அதிகாரி கொலை எதிரொலி மணல் கடத்தல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : D.C. ,GI ,Praveshkumar ,Nagarko ,Kumari ,V. ,PA ,GI GG ,
× RELATED உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்,...