×

புதிய கல்விக்கொள்கையை நாம் உருவாக்க வேண்டும் கனிமொழி எம்.பி பேச்சு

 

தக்கலை, ஏப்.27: திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி நேற்று காலை குமரி மாவட்டம் வருகை தந்தார். அவருக்கு திமுக சார்பில் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் ஆகியோர் தலைமையில் நாகர்கோவில் அருகே தேரேக்கால்புதூர் பகுதியில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் பூதலிங்கம்பிள்ளை, சோமு, கிழக்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், பொருளாளர் கேட்சன், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன்டேவிட்சன், நாகர்கோவில் மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் லிவிங்ஸ்டன், செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர், ரெமோன் மனோதங்கராஜ், தாமரைபாரதி, முன்னாள் எம்எல்ஏ ராஜன், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பிஎஸ்பி சந்திரா, முஞ்சிறை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் அம்சி நடராஜன் உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி முளகுமூடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் பெருமக்கள் அதிகமாக இருக்க கூடிய மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். கல்வி அறிவில் மிகச்சிறந்த மாவட்டமாக இருப்பது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதில் மிக முக்கிய பங்காற்றிக்கொண்டிருக்கின்ற மாவட்டம். அந்த பெருமை உங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது. தோள் சீலை போராட்டத்தின் வழியாக தன்னுடை எதிர்ப்பை முதன் முதலாக பதிவு செய்திருக்க கூடிய அது அடிமைத்தனத்திற்கு எதிரான குரலாகவும், பெண்மையை பாதுகாக்க கூடிய, பெண்ணின் குரலை பாதுகாக்க கூடிய, பெண்ணின் உரிமைகளை பாதுகாக்க கூடிய அவர்கள் எடுக்கின்ற முடிவுகளுக்கு, உரிமையை தரக்கூடிய போராட்டத்திற்கு வித்திட்ட பெருமையோடு இருக்கும் மாவட்டம்.

தொடர்ந்து சமூக நீதிக்கான சமூக விடுதலைக்கான கருத்துகளை தன்னகத்தில் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மாவட்டம். அதனால் தான் இந்த மாவட்டத்தை சுற்றி சுற்றி பிரிவினை சக்திகள் வந்து கொண்டிருக்கிறார்கள். நம்மையெல்லாம் பிரித்து பார்த்துவிட வேண்டும், ஜாதி ரீதியாக, மதரீதியாக தமிழர்களாக ஒற்றுமையாக வளர்ந்து கொண்டிருக்கின்றவர்களின் இடையே பிளவுகளை ஏற்படுத்தி கலவரங்களை ஏற்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் சுற்றி வருகின்றவர்களுக்கு பாடம் புகட்டும் மாவட்டமாக இந்த மாவட்டம் உள்ளது.

புதிய கல்விக்கொள்கையில் உயர் கல்வியை 50 சதவீதம் தொட்டுவிட வேண்டும் என்பது தேசிய அளவிலான கனவு. ஆனால் அதனை எப்போதோ எட்டிவிட்டோம். தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கு மேல் உயர் கல்வி கற்றவர்கள் இருக்கிறார்கள். புதிய கல்விக்கொள்கை நமக்கு தேவையா? இல்லையா? நாம் புதிய கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டும். நீங்கள் என்னென்ன அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவற்றை அடைந்து வழிகாட்டியாக இருக்க கூடியவர்கள் தமிழ்நாட்டில் இருக்க கூடியவர்கள்.

நாம் புதிய கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டும். அதனை ஒன்றிய அரசாங்கம் பின்பற்ற வேண்டும். ஆனால் அவர்கள் புதிய கல்விக்கொள்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் 30 ஆண்டுகள் அவர்கள் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சிந்தித்து பார்த்தால் அவர்கள் மதக்கலவரங்களை, மனமாச்சரியங்களால் மக்களை பிரித்து பார்ப்பதிலும், இட ஒதுக்கீடுக்கு எதிராக பல்வேறு வகையில் இந்த சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்கிறார்கள். இதில் வந்த விரிசல்களில் வரக்கூடிய கலவரங்களை அடக்குவதில் மக்கள் கல்வியை பற்றி, ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுவது இல்லை. அவர்கள் கவலைப்படுவது விஷ விதைகளை விதைத்து அதில் குளிர்காய வேண்டும் என்பதுதான்.

தமிழகம் போன்று சமூக நீதியை கருவாகக் கொண்டிருக்கின்ற மாநிலங்களில் நாம் அத்தனை பேரும் ஒரு தளத்தில் நின்று இயங்கக்கூடியவர்களாக எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம் முதல்வர் முன் வைக்க கூடிய நம்முடைய அடிப்படை குறிக்கோள். அதனை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அதில் எந்த தடைகளும் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்திய நாட்டை காப்பாற்றுவதும் நமது கடமை, இங்கிருந்து செய்திகளை சொல்லி அனுப்ப வேண்டும். சிந்தித்து செயல்படக்கூடியவர்களாக, நமது பிள்ளைகளை உருவாக்க வேண்டும். மனிதர்களை நேசிக்க கூடியவர்களாக, காழ்ப்புணர்ச்சி அற்றவர்களாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post புதிய கல்விக்கொள்கையை நாம் உருவாக்க வேண்டும் கனிமொழி எம்.பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kanimozhi MP ,Thakkalai ,DMK ,Deputy General Secretary ,Kumari district ,Dinakaran ,
× RELATED வேட்பாளராக அறிவிக்கப்பட்டு...