×

ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் தமிழ்நாட்டில் புதிதாக 11 நர்சிங் கல்லூரிகள்: மருத்துவ கருவிகள் பூங்கா அமைகிறது

புதுடெல்லி: நாடு முழுவதும் தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இதில், நாட்டில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 15,700 நர்சிங் பட்டதாரிகள் உருவாக வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளன.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதே போல, மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கை 2023-க்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கருவிகள் துறை தற்போதுள்ள ரூ.88,000 கோடி என்பதிலிருந்து ரூ. 4 லட்சம் கோடி வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மருத்துவ கருவிகள் தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும் என்றும் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பலியான 10 போலீசாருக்கு அமைச்சரவை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் தமிழ்நாட்டில் புதிதாக 11 நர்சிங் கல்லூரிகள்: மருத்துவ கருவிகள் பூங்கா அமைகிறது appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Tamil Nadu ,Medical ,New Delhi ,
× RELATED 6 மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி; தவறான தகவல்: தமிழ்நாடு அரசு விளக்கம்