×

அதிமுகவின் மெகா ஊழல்

பத்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை உட்பட எல்லாத் துறைகளிலும் ஊழல்… ஊழல்… ஊழல் மட்டுமே பிரதானமாக நடந்திருக்கிறது.ஜெயலலிதா மறைவுக்கு பின் சிறிதுகாலம் ஓ.பன்னீர்செல்வம், அதன் பின் 4 ஆண்டுகள் வரை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். இவரது கட்டுப்பாட்டில்தான் அப்போது பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகள் இருந்தன. அப்போது, நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் தொழில்நுட்பரீதியாக நடந்திருப்பது சிஏஜி அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2019 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்தவரை, நெடுஞ்சாலைத்துறையில் அரசு அதிகாரிகளின் கம்ப்யூட்டர்கள் மூலம் முறைகேடாக டெண்டர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் மட்டும் 2,091 டெண்டர்களை ஒரே கம்ப்யூட்டரை பயன்படுத்தி தாக்கல் செய்துள்ளனர். பெரும்பாலான டெண்டர்கள் ஒரே ஐ.பி முகவரியில் இருந்து தாக்கலாகி உள்ளது. இது ஒப்பந்த விதிமுறைகளை மீறிய செயல். இதன்மூலம் பலர் ஒப்பந்தப்புள்ளி கோரியதாக கணக்கு காட்டி, எடப்பாடியின் உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

அதாவது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களில் டெண்டர்களை எடுத்துள்ளனர்.இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த செய்யாத்துரையின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.183 கோடி, 105 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவரது எஸ்பிகே நிறுவன குழுமத்திற்கே கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பேக்கேஜ் டெண்டர் முறையில் பல டெண்டர்களை கொடுத்துள்ளது.

மேலும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திலும் விளம்பரங்கள் வெளியிட்டதில் ரூ.2.18 கோடி முறைகேடு நடந்துள்ளது. ஒன்றிய அரசு 5.09 லட்சம் வீடுகள் கட்ட அனுமதித்த நிலையில், வெறும் 2.80 லட்சம் வீடுகளே கட்டப்பட்டுள்ளன. தகுதியான பட்டியலின மற்றும் பழங்குடியின பயனாளிகளை கண்டறியாமல் விட்டதால், ஒன்றிய அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கிய ரூ.1,515.60 கோடியை அப்போதைய அதிமுக அரசால் பெற இயலவில்லை. ஆதிதிராவிடர் நல நிதியும் இதேபோல் திருப்பி அனுப்பப்பட்டது.

இவை மட்டுமின்றி, அதிமுக ஆட்சியின்போது, பிளஸ் 2 மாணவர்களுக்காக 60 ஆயிரம் லேப்டாப்கள் வாங்கப்பட்டன. ஆனால், 8,079 லேப்டாப்கள் மட்டுமே வழங்கப்பட்டது. தகுந்த நேரத்தில் வழங்காததால், லேப்டாப்பின் பேட்டரி, பாகங்கள் பழுதடைந்து காலாவதியாகி அரசுக்கு ரூ.68.71 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கிய டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 60 இடங்களில் சோதனை நடந்தது. இதேபோல் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடந்தன.மதுரை, கோவையில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இப்படியாக, அதிமுக ஊழல் கட்சியாகவும், தலைமை பதவிக்கு மல்லுக்கட்டும் கட்சியாகவுமே இருந்து வருகிறது. இதனால் 10 ஆண்டுகாலம் வேதனையான ஆட்சியை அனுபவித்த பரிதாப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டது தான் துரதிருஷ்டவசமானது.

The post அதிமுகவின் மெகா ஊழல் appeared first on Dinakaran.

Tags : Mega Scandal of the Incest ,
× RELATED சொல்லிட்டாங்க…