×

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி அரசு பொருட்காட்சி ஏப்.29ல் துவக்கம்: சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி, ஏராளமான பொழுது போக்கு அம்சங்களுடன் அரசு பொருட்காட்சி வரும் 29ம் தேதி துவங்குகிறது. விழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். சிறுவர்களுக்கு ரூ.10, பெரியர்களுக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும், ஏப்ரல், மே மாதங்களில், தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும். இந்தாண்டு சித்திரை திருவிழா, கடந்த 23ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் ஏப்.30ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம், மே1ல் திக்குவிஜயம், 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 3ம் தேதி தேரோட்டம், அதனைத் தொடர்ந்து, மே4ம் தேதி அழகர் எதிர்ச்சேவை, 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்குதல், 7ம் தேதி அழகர் பூப்பல்லக்கு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்த விழாவை காண மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் இருந்து, லட்சக்கணக்கான பொதுமக்கள் மதுரையில் திரள்வார்கள். இந்த விழாவின் ஒரு நிகழ்வாக இந்த அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. 27 அரசுத்துறைகளும், 12 அரசு பொதுத்துறை நிறுவனங்கள் அரங்கு அமைத்து, தங்களது துறையின் செயல்பாடு, நலத்திட்ட உதவிகள் குறித்து, பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துகின்றனர். மேலும், குழந்தைகளுக்கான கேளிக்கை, விளையாட்டுகள், ராட்டினம் உள்ளிட்டவை பொழுது போக்கு அம்சங்களும், மற்றும் 25க்கு மேற்பட்ட பொருட்கள் விற்பனை கடைகள், பொழுதுபோக்கு, கேளிக்கை விளையாட்டுகளுக்கான சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியை வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்கு, செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் திறந்து வைக்கிறார். இதில், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன், மேயர் இந்திராணி மற்றும் எம்எல்ஏக்கள், கலெக்டர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

பொருட்காட்சியை பார்வையிட சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவில் அழகர் எதிர்ச்சேவை நடைபெறும், மே4 மற்றும் அழகர் பூப்பல்லக்கு நடைபெறும் 7ம் தேதி இரவு முழுவதும் பொருட்காட்சி திறந்து இருக்கும். பக்தர்கள் அங்கு தங்கி செல்லலாம். மேலும், தினமும், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறும்.

The post மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி அரசு பொருட்காட்சி ஏப்.29ல் துவக்கம்: சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 appeared first on Dinakaran.

Tags : Chitri festival ,Madurai ,Chitras festival in Madurai ,
× RELATED எட்டு நாட்கள் களைகட்டிய வீரபாண்டி...