×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று (26.04.2023) தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மேற்கு ராஜகோபுரம் பாலாலயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், அதனைத் தொடர்ந்து, திருக்கோயில் யானை தெய்வானைக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“தமிழ்நாடு முதலமைச்சரால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. திருப்பணிகளை புதுதில்லியில் இருக்கின்ற வாமசுந்தரி அசோசியேஷன் என்ற நிறுவனம் ரூ.206.45 கோடி செலவில் 18 பணிகளையும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.99.90 கோடி செலவில் 18 பணிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு திருக்கோயில் சார்பில் 3 லட்சம் சதுரடியும், திருமதி வாமசுந்தரி அசோசியேஷன் என்ற நிறுவனம் சார்பில் 3 லட்சம் சதுரடி பரப்பளவிலும் பணிகள் நடைபெற இருக்கின்றன.

இதில் தொடங்கப்பட்டிருக்கின்ற ஒரு லட்சம் சதுரடி பரப்பிலான பணிகளில் 14 சதவீத பணிகள் நிறைவுற்றிருக்கின்றன. ஏற்கனவே கடந்த மாதம் கிழக்கு கோபுரம் பாலாலயம் பணி தொடங்கப்பட்டது. இன்றைய தினம் மேற்கு கோபுர திருப்பணிகளுக்கான பாலாலயம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.16.40 கோடி செலவில் திருக்கோயிலின் கொடிமரம் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதோடு இறைவனுக்கு நிகராக போற்றப்படும் யானையும் மகிழ்ச்சியாக இருந்திட ரூ.30 லட்சம் செலவில் யானை குளியல் தொட்டி கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் இருக்கின்ற யானைகளில் மடங்களின் கட்டுப்பாட்டிலுள்ள 2 யானைகளை தவிர்த்து 27 யானைகளுக்கு இதுவரை குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளன. திருச்செந்தூர் திருக்கோயிலின் திருப்பணிகளை மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாரந்தோறும் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றார்.

இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திருப்பணிகளின் நிலை குறித்து அவ்வபோது கேட்டறிந்து வருகிறார்கள். இந்த திருப்பணிகள் நேர்த்தியாகவும், விரைவாகவும் நடப்பதற்கு உறுதுணையாய் இருக்கின்ற அனைவருக்கும் துறையின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இந்தாண்டு மானியக்கோரிக்கையின் போது திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ஒரு நந்தவனம் அமைக்க ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாடும் வகையில் நடைபாதை அமைக்க ரூ.50 லட்சம் என 4 பணிகளுக்கும், இத்திருக்கோயிலின் 3 உபகோயில்கள் திருப்பணிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7 பணிகளுக்கு ரூ.6 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

12 ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத கோயில்களில் திருப்பணிகள் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 714 திருக்கோயில்கள் பராமரிப்பதற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அரசு மானியம் ரூ.100 கோடியில் 116 பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் ரூ.100 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 3 கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 1 லட்சம் சதுர அடியில் பணிகள் நடைபெறுகிறது. அதில் நிலத்தடி நீர்தேக்க தொட்டி, நிர்வாக அலுவலகம், கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.

வாமசுந்தரி அசோசியேஷன் என்ற நிறுவனம் முழுவேகத்தோடு திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையும் அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்து தருகிறோம். 2025 ஆம் ஆண்டு நிறைவுக்குள் குடமுழுக்கு நடைபெற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. யாத்திரி நிவாஸ் பணிகளுக்கு ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இத்திருக்கோயிலை பொறுத்தவரை அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன், இணை ஆணையர்/செயல் அலுவலர் கார்த்திக், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Subramania ,Swami ,Temple ,Minister ,Shekharbabu ,Thoothukudi ,Tiruchendur ,Arulmiku ,Subramania Swami ,Hindu ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் புதுமண...