×

புர்கா

நன்றி குங்குமம் தோழி

கணவன் இறந்ததால் 4 மாதங்கள் தனியாக ஆண்கள் யாரையும் பார்க்காமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என மதம் சொல்லும் ‘இத்தாத்’ எனும் கொள்கையை பின்பற்றி அதன்படி வீட்டினுள் இருக்கிறாள் நஜ்மா. ஒரு நடு இரவில் கத்தி குத்துடன் வந்து நஜ்மா இருக்கும் வீட்டின் கதவை தட்டி காப்பாற்ற சொல்லி யாசகம் கேட்கிறார் சூர்யா. அவரை காப்பாற்றுகிறார் நஜ்மா. ஒரு நாள் முழுவதும் இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதன் பின் என்ன ஆனது…? நஜ்மா ஏன் அவரை காப்பாற்றினார்? சூர்யா ஏன் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருக்கிறார்? அந்த வீட்டிற்குள் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் சர்ஜூன் கே.எம். படத்தின் கதை இருவர் சந்தித்துக் கொள்கிறார்கள் என்று தொடங்கி படம் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளையும் சட்டத்திட்டங்களையும் ஒவ்வொரு ப்ரேமிலும் விமர்சனம் செய்கிறது. ஒரே வீட்டிற்குள் இருவர் மட்டுமே படம் முழுவதும் வருகிறார்கள். ஆனால் படம் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக நகர்கிறது. மதங்களும் அதில் பின்பற்றப்படும் சடங்குகள் பற்றிய ஒரு உரையாடலை தான் இந்த படம் முன் வைக்கிறது.

ஒரு இந்து ஆண், ஒரு முஸ்லீம் பெண் இவர்கள் இருவரும் தங்களுடைய மதங்கள் உருவாக்கி வைத்திருக்கிற கட்டுப்பாடுகளுக்குள்ளும் சடங்குகளுக்குள்ளும் சிக்கி தவிக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகளை மீறிவும் முடியாமல் அதை விட்டு வெளியேறவும் முடியாமல் தவிக்கும் தவிப்பை அதனால் அவர்களுக்கு ஏற்படும் வலிகளை இருவரும் பரஸ்பரம் உரையாடி கொள்கிறார்கள். இந்த உரையாடல் அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்கிறது.

இதில் நஜ்மாவின் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் தான் சிறப்பானது. அதிகாலையில் எழுவது, தொழுதல், சமைப்பது, சாப்பிடுவது, படிப்பது, தூங்குவது என ஒரு நாள் முழுவதும் ஒரு வீட்டிற்குள் தொடங்கி வீட்டிற்குள்ளேயே முடிகிறது. நஜ்மாவின் உலகமே அவருடைய வீடு மட்டும் தான். வெறுமையின் தவிப்பை தன்னுடைய முக அசைவுகளிலும் கண்களிலும் அழகாக வெளிக்காட்டியிருக்கிறார் நஜ்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிர்னாலினி. படம் முழுவதும் வேறொரு ஆணுடன் இருந்தாலும் தன்னுடைய முகத்தை வெறொரு ஆணுக்கு காட்டக்கூடாது என சொல்லும் தன்னுடைய மதச் சட்டதிட்டங்களை அப்படியே பின்பற்றுபவளாகவும், அதே நேரத்தில் தன்னுடைய ஆசைகளுக்காகவும் கனவுகளுக்காகவும் மத கட்டளைகளை எதிர்க்க துணிபவளாகவும் எழுதப்பட்டிருக்கிறது நஜ்மாவின் கதாபாத்திரம்.

கல்யாணம் ஆன பின்னர் தன்னுடைய கணவர் அன்வரிடம் நஜ்மா, ‘உங்க கூட பேச ரொம்ப நாள் முயற்சி செய்தேன். ஆனா முடியல. உங்கள புரிஞ்சுக்கவும் காதலிக்கவும் எனக்கு கொஞ்ச காலம் வேண்டும்’ என தன் தரப்பின் நியாயங்களை தன்னுடைய சுயம் இழக்காமல் படம் முழுக்க பேசுகிறார். படம் முழுவதும் பெண்கள் மதங்களினால் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள் என பளிச்சென்று வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

நஜ்மா தன்னுடைய கனவுகள், ஆசைகள் சுதந்திரம் பற்றி பேசும் போதெல்லாம் அவருக்கு முன்னால் ஒரு மெல்லிய திரையை மட்டுமே காட்டியிருப்பார்கள். இந்த பிரச்னைகள் எல்லாமே மெல்லிய திரையை போன்றதே என குறியீடாக காட்டியிருப்பது சிறப்பு. இதே போல சூர்யாவாக வரும் கலையரசனின் கதாபாத்திரமும் மதங்கள் ஆண்களை எந்த அளவிற்கு கட்டுப்படுத்துகிறது என சொல்கிறது.

சூர்யா தன் அம்மா பற்றி சொல்வதெல்லாம் வேறொரு கண்ணோட்டத்தை நோக்கி நகர்கிறது. “எந்த ஆம்பிளையையும் பார்க்கக் கூடாதுன்னு பொம்பளைய அடைச்சு வைக்குறது தப்பு, அதே ஆம்பிளையை சந்தோஷப்படுத்த ஒரு பொம்பளையை அடைச்சு வைக்குறதும் தப்புதான்.” ‘‘உன்னோட சொந்தக்காரங்க சொல்றதுக்கெல்லாம் சரினு தலையாட்டுறியே அதுக்கு காரணம் நீ 5ம் வகுப்பு படிச்சதுதான்’ போன்ற வசனங்கள் எல்லாமே கூர்மையாக எழுதப்பட்டுள்ளன. ஒரே வீடு இருவர் மட்டுமே எனும் போது வசனங்கள்தான் அடுத்தடுத்து கதையை நகர்த்திச் செல்கின்றன. இதை உணர்ந்து வசனங்களை திறமையாகவே கையாண்டிருக்கின்றனர். அதே போல மதங்கள் மீதான விமர்சனங்களை முன் வைப்பதாலும் அதை பற்றிய தெளிவோடு மதச் சட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு நியாயத்தை பேசியிருக்கிறார்கள்.

எல்லா வகையான மதச் சட்டங்களினாலும் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் பெண்களாகவே இருக்கிறார்கள்? உலகில் நடந்த போர்களில் கொல்லப்பட்டவர்களை மட்டுமே பேசுகிறோமே? அதில் எத்தனை பேர் விதவைகளாக ஆக்கப்பட்டார்கள்? அந்த பெண்களின் நிலை என்ன என்று நாம் யோசித்ததுண்டா? மத கருத்துகளில் கூறப்படும் ஒழுக்கம் சார்ந்த கருத்துகள் எல்லாமே பெண்களுக்கானவையாகவே இருக்கின்றன. எல்லா மதக் கருத்துகளின் அடிப்படையும் பெண்களை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன என பல கேள்விகளை எழுப்புகிறது இந்த படம். மதச் சட்டங்கள் எல்லாமே அந்த காலகட்டத்திற்கு ஏற்ப எழுதப்பட்டவை. அவை காலத்திற்கு தகுந்தாற் போல மாற வேண்டும். மனிதர்களின் சிந்தனைகள் மாறுவதை போல மதச் சட்டங்களும் மாற வேண்டும் என்பதைத்தான் சொல்ல வருகிறது புர்கா.

தொகுப்பு : மா.வினோத்குமார்

The post புர்கா appeared first on Dinakaran.

Tags : burqa ,kumkum ,Dinakaran ,
× RELATED அன்றாட பயன்பாட்டுக்கான குறிப்புகள்