×

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சென்னை ஆசிரியர் உள்பட 13 பேர் கைது: ₹30 லட்சம் பறிமுதல்

திருமலை: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சென்னை நடன பள்ளி ஆசிரியர் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கள்ளநோட்டு கும்பல் நடமாட்டம் இருப்பதாகவும், ஏராளமான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும் சைபராபாத் ஆணையாளர் ஸ்டீபன் ரவீந்திராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் போலீசார் நேற்று ஐதராபாத்தில் பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 13 பேர் கும்பல், பொதுமக்களிடம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது தெரிய வந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் நடன பள்ளி ஆசிரியர் ராஜேஷ், நிலேஷ் உள்பட 13 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக நடந்த விசாரணை குறித்து சைபராபாத் காவல் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக உள்ளார். இவர் சென்னையில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை வாங்கி மற்றவர்களுக்கு ₹1 லட்சம் ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்கு ₹3 லட்சம் கள்ள நோட்டுகள் கொடுத்துள்ளார்.

இவரும் மற்றொரு முக்கிய குற்றவாளியான நிலேஷ் என்பவரும் பெரும்பாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கள்ள நோட்டுகளை மாற்றியுள்ளனர். அப்பாவி மக்களிடமே இவர்கள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். கைது செய்யபட்டவர்களிடம் இருந்து ₹30.68 லட்சம் கள்ள நோட்டுகள், ₹60,500 ரொக்கம், 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளை கண்காணித்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என ெதாடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சென்னை ஆசிரியர் உள்பட 13 பேர் கைது: ₹30 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamilnadu, Andhra, Karnataka, Telangana ,Tirumala ,Tamil Nadu ,Andhra ,Karnataka ,Telangana ,Karnataka, Telangana ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ