×

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: சர்வதேச அமைப்புகளின் கோரிக்கை நிராகரிப்பு

சிங்கப்பூர்: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் தமிழர் தங்கராஜ் சுப்பையாவின் மரண தண்டனையை அந்நாட்டு அரசு நிறைவேற்றியது. சர்வதேச அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்தது. சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர சிங்கப்பூர் அரசு முடிவு செய்தது. அதன்படி ஒரு கிலோ போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கப்பூர் தமிழரான தங்கராஜ் சுப்பையா (46) என்பவருக்கு 26ம் தேதி (இன்று) தூக்கு தண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. தங்கராஜ் சுப்பையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னதாக தூக்கு தண்டனை நிறைவேற்றும் முடிவை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிங்கப்பூருக்கான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட தங்கராஜ் சுப்பையாவுக்கு, அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியது. இதன்மூலம் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்ற சர்வதேச அமைப்புகளின் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்தது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கடுமையாக எடுத்து வரும் சிங்கப்பூர் அரசு, கடந்த ஆண்டு மட்டும் 11 பேரை இந்த வழக்கில் தூக்கில் போட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது மூத்த சகோதரி லீலாவதி, மருமகள் சுபாஷினி ஆகியோர் கூறுகையில், `தங்கராஜ் எந்தத் தவறும் செய்யவில்லை என்று எங்களுக்குத் தெரியும். ஆரம்பத்திலிருந்தே அவரது வழக்கை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை நடக்கவில்லை.

அதனால் நாங்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். தற்போது ஒரு கிலோ கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதற்காக தங்கராஜூக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதாக, எங்களுக்கு அரசு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது’ என்று உருக்கத்துடன் ெதரிவித்தார். ஆனால் இன்று தங்கராஜ் சுப்பையா தூக்கிலிடப்பட்டதால், அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

The post போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: சர்வதேச அமைப்புகளின் கோரிக்கை நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Singapore ,Thangaraj Subbiah ,Dinakaran ,
× RELATED அயன் பட பாணியில் ரூ.1 கோடி தங்கம் கடத்தல்