×

விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்கும் இளைஞர்களுக்கு உதவும் வேளாண் சுற்றுலா திட்டம்-விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்

மதுரை : வேளாண் சுற்றுலா என்பது, இயங்கும் வேளாண் பண்ணைகள் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இயற்கையை ரசிப்பதற்காகவும், வேளாண் பணிகளில் ஈடுபடவும், இயற்கை, சூழலில் தங்கவும், கிராமத்து உணவை உண்டு ரசிக்கவும், கிராமத்து கலாசாரத்தை நேரில் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. இதன் மூலம் விவசாயத்தின் முக்கியத்தும் குறித்து பார்வையாளர் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய இளையதலைமுறையினருக்கு கிராமத்து இயற்கையுடனான தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள இந்த வேளாண் சுற்றுலா உதவுகிறது. வேளாண்துறையையும், சுற்றுலாத்துறையையும் இணைக்கும் பாலமாக விளங்கக் கூடிய வேளாண் சுற்றுலா, இன்றைய தமிழ்நாட்டின் விவசாயிகளையும் விவசாயம் சார்ந்த தொழில்களையும் தொழில் தொடங்கும் இளைய தலைமுறைக்கு உதவும் வகையில் உள்ளது.

உலக சுற்றுலா பயணிகளை கவர்வதில் இந்தியா தெற்கு ஆசியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. அதிலும் தமிழ்நாடு பல்லாண்டு பழமையான பண்பாட்டு வரலாற்றாலும் பாரம்பரியமான இசை, நடனம் நாட்டுப்புறக் கலைகள், கட்டிடக் கலைகளாலும் உலக சுற்றுலா பயணிகளை கவர்வதில் ஆறாம் இடத்திலும், உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் முதல் இடத்திலும் உள்ளது. 1985ம் ஆண்டு இத்தாலியில், அரசால் முறைப்படுத்தப்பட்டு வேளாண்சுற்றுலாதுறை இன்று 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் சுற்றுலா தலங்களுடன் வேளாண்தொழிலை பன்மடங்கு லாபகரமான தொழிலாக மாற்றி சாதனை புரிந்து முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின், வேளாண் சுற்றுலாவின் முன்னோடியாக மகாராஷ்டிரா மாநிலம் 29 மாவட்டங்களில் 325 வேளாண் சுற்றுலா தலங்களுடன் இயங்கி வருகிறது.

கடந்த 2019, 2020ம் ஆண்டுகளில் 25 சதவீத வருமான வளர்ச்சியை கூடுதல் லாபமாக ஈட்ட விவசாயிகளுக்கு உதவி உள்ளது. 1 லட்சம் வேலைவாய்ப்பை கிராமப்புற பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழங்கி உள்ளது. நம் அண்மை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவும் வேளாண் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் 85 சதவீத மக்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் 17,662 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் பண்ணைகளை தேர்ந்தெடுத்து, முறையான பயிற்சினை கொடுத்து சிறு சிறு மாற்றங்கள் செய்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேளாண் சுற்றுலா தலங்களை உருவாக்க முடியும்.

தற்போது மதுரையில் அழகர்கோவில் ரோட்டில் உள்ள மாத்துாரில் கிரேஸ் கார்டன் வேளாண்சுற்றுலா தலம் என்ற மாதிரி பண்ணையை நபார்டு, மதுரை அக்ரிபிசினஸ் இன்குபேஷன் அமைப்பு உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நபார்டு, மதுரை அக்ரிபிசினஸ் இன்குபேஷன் உதவியுடன் தமிழ்நாட்டில் டிஎன்எடிஎன்சி என்ற நிறுவனத்தை நிறுவி 2025ம் ஆண்டுக்குள், குறைந்தது ஆயிரம் வேளாண் சுற்றுலா தலங்களை உருவாக்குவது, ஏற்கெனவே இருக்கின்ற வேளாண் சுற்றுலா தலங்களை மேம்படுத்தி, இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து இதற்கான ஒரு இணையதளத்தையும், செயலியையும் உருவாக்கி இந்த திட்டங்கள் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவது போன்றவற்றில் கவனம் காட்டப்படுகிறது.

நேரடியாகவும், மறைமுகமாகவும், கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தற்போதைய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காகவும், விவசாயக் குடும்பங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், விவசாயிகளின் வருமான ஏற்ற இறக்கங்களை சீர்படுத்தி கூடுதல் வருமானத்தை பெறவும், விவசாய பண்ணைகளில் விளையும் விளைப் பொருட்களையும், கைவினைப் பொருட்களையும், மற்ற இதர பொருட்களையும் நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தவும் இது உதவும்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு https://www.tnatnc.com என்ற இணையதளம் மூலமாகவும் 98946-10778 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சுற்றுலா தல பொறுப்பாளர் அருள் ஜேம்ஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலா மிகப்பெரும் வெற்றியடைவதற்கான சாத்தியம் உண்டு. இது எல்லாத் தரப்பினரையும் கவரும் திட்டமாகும்.

வேளாண் அறுவடையைக் கொண்டாடுவது, தோட்டத்தில் விளைந்தவற்றை சுற்றுலாவாசிகளே அறுவடை செய்வது, பண்ணை குட்டைகளில் மீன் பிடிப்பது, ஊரக வேளாண் சந்தையைப் பார்வையிடுவது, கிராமப்புற கைவினைக் கலைஞர்களிடம் பொருட்கள் வாங்குவது, மாட்டுவண்டி சவாரி செய்வது, மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த வகுப்புகளை கற்றுக்கொடுப்பது என பலவற்றையும் உள்ளடக்கிய திட்டமாகும். மேலும் சுத்தமான விவசாய விளைபொருட்களை வாங்கிச் செல்வர். இது விவசாயிகளுக்கு ஒரு கூடுதல் வருமானமாக இருக்கும் இவ்வாறு தெரிவித்தார்.

The post விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்கும் இளைஞர்களுக்கு உதவும் வேளாண் சுற்றுலா திட்டம்-விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...