
கரூர் : கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில், பாலித்தீன் கவர்களை ஒழிப்போம், நிலத்தை காப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், பிளாஸ்டிக்கை வாங்காதே, நம் பூமி தாங்காதே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியை காக்க மாற்றத்தை உருவாக்குவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், தூய்மையான காற்றை சுவாசித்திடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
மரங்கள் இருக்கும் இடம் மகிழச்சி நிலைக்குமிடம், மரம் மனிதனின் மூன்றாவது கரம், துணிப்பையை தூக்கு, நெகிழியை நீக்கு, ஆளுக்கு ஒரு மரம் நடுவோம், மண்ணில் வாழ மண்ணை ஆள, மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்றனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணி, தாந்தோணிமலை அரசுக் கலைக் கல்லூரி வரை சென்றது. இந்த பேரணியில், கரூர் அரசு கலைக் கல்லூரி, சாரதா கலை கல்லூரி, அமராவதி கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் வேல்முருகன், ஜெயக்குமார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.