×

நெல்லை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியை திருப்பியனுப்ப கூடாது டவுன் ரதவீதிகளை அழகுப்படுத்த துரித நடவடிக்கை-குறைதீர் கூட்டத்தில் மேயரிடம் பொதுமக்கள் மனு

நெல்லை : நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ள நிலையில், அதற்குள் டவுன் ரதவீதிகளை அழகுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர். அத்துடன் ஸ்மார்ட் சிட்டி நிதியை திருப்பியனுப்ப கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் இந்த வாரத்திற்கான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த மேயர் பி.எம். சரவணன், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த மக்கள், குடிநீர், சாலைப்பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டார். கூட்டத்திற்கு செயற்பொறியாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்சா, காளிமுத்து, உதவி செயற்பொறியாளர் லெனின், பைஜூ உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் பி.எம்.சரவணண், கோரிக்கை விவரத்தை கேட்டறிந்ததுடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் பாளையைச் சேர்ந்த சமூகஆர்வலரான பெர்டின் ராயன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன், தச்சை தங்கவேலு, இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் உடையார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மேயரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை டவுனில் உள்ள 4 ரத வீதிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுப்படுத்த கடந்த 2019ம் ஆண்டு ரூ.14 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பணிகள் தொடர்பாக ஒப்பந்ததாரர், ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததால் பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பணிகளை அடுத்த 3 மாதங்களுக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடித்தாக வேண்டும். இல்லையேல் அந்த நிதியை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும். மதுரை, தஞ்சை மாநகராட்சிகளில் எல்லாம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரதவீதிகள் அனைத்தும் அழகுற காட்சியளிக்கின்றன. நெல்லையைப் பொருத்தவரை பாரம்பரியத்தின் அடையாளமாக டவுன் நெல்லையப்பர் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்போடு தேர்பவனி வரும் ரதவீதிகளை அழகுற செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைந்து பயன்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இதனிடையே நயினார்குளம் நீர்ப்பாசன சங்கத்தின் உதவித் தலைவர் முருகன் என்பவர் மேயரிடம் அளித்த மனு விவரம்: தச்சநல்லூர் ஆனந்தாபுரம் பகுதியில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தொட்டிக்கு சுற்றுசுவர் இல்லாததால் சுகாதார சீர்கேடுகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே நீர்த்தேக்கத்தொட்டியை சுற்றிலும் சுற்றுசுவர் அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிககை விடுத்துள்ளார்.

இதே போல் பாளை வி.எம்.சத்திரம் வஉசி நகர் மக்கள் திருமலைக்குமார் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி மனை வரி, திட்ட வரி ஆகியவற்றை முறையாக செலுத்தி வருகிறோம். ஆனாலும் எங்கள் நகருக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை. எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

The post நெல்லை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியை திருப்பியனுப்ப கூடாது டவுன் ரதவீதிகளை அழகுப்படுத்த துரித நடவடிக்கை-குறைதீர் கூட்டத்தில் மேயரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Nellie Corporation ,City ,Mayor ,Kuradir ,Nellai ,Nellai Corporation ,Smart City ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...