×

மஞ்சூரில் காட்டு மாடுகள் நடமாட்டம் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுப்புற பகுதியில் காட்டு மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருவது வாடிக்கையாக உள்ளது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் விவசாயிகள் ஏராளமானோர் உருளைகிழங்கு, முட்டைகோஸ், பட்டானி, அவரை, பீட்ரூட், காலிபிளவர், கேரட் உள்ளிட்ட பல வகையான மலைகாய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில், பகல் நேரங்களில் காட்டு மாடுகள் கூட்டமாக தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருவதுடன் இரவு நேரங்களில் மலைகாய்கறி தோட்டங்களில் புகுந்து காய்கறிகளை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காட்டு மாடுகளின் நடமாட்டத்தால் தேயிலைத் தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன் பாக்கொரை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது மூன்று காட்டு மாடுகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து இலை பறித்து கொண்டிருந்த இரண்டு பெண் தொழிலாளர்களை நோக்கி சென்றது.

இதை கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதை தவிர்த்து அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்கள். நாளுக்குநாள் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் அதிகரித்து வரும் காட்டு மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

The post மஞ்சூரில் காட்டு மாடுகள் நடமாட்டம் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manjur ,Manjoor ,Nilgiris ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...