×

உலக மலேரியா தினத்தையொட்டி ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்

ஈரோடு : ஈரோட்டில் உலக மலேரியா தினத்தையொட்டி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.உலக மலேரியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஈரோடு மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று சாலையோரம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் 3ம் மண்டலம் சார்பில் மலேரியா மற்றும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. இதில், வீடுகள், பொது இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும். பயன்படுத்தப்படாத பாட்டில்கள், பிளாஸ்டிக் குவளைகள், தேங்காய் ஓடுகள், டயர்கள், மண்பாண்டங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தொடர் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை உடனடியாக அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். வீடுகளில் குடிநீர் சேகரிக்கும் தொட்டிகள், பேரல்கள், பாத்திரங்களை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்.

கொசுவர்த்தி போன்றவை பயன்படுத்தாமல், கொசுவலைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பணியில் சுகாதார பணியாளர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக, 4 மண்டல அலுவலகங்களிலும் மலேரியா நோய் தடுப்பு உறுதி மொழியினை தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

The post உலக மலேரியா தினத்தையொட்டி ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Erode ,World Malaria Day ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு