×

நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் நெல் மூட்டைகள் திருட்டு : மானாமதுரையில் துணிகரம்

மானாமதுரை : மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா ஏனாதி, காரைக்குடி தாலுகா பள்ளத்தூர், மானாமதுரை சிப்காட் ஆகிய பகுதிகளில் ரூ.28.03 கோடி மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தளத்துடன் மேற்கூரையுடன் நெல் சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்பட்டுள்ளன.

மானாமதுரை சிப்காட்டில் நவீன அரிசி ஆலை பின்புறம் உள்ள இந்த கிட்டங்கியில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கொன்னக்குளம் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று கால்நடைகள் மேய்க்க சென்ற போது, கிட்டங்கியை ஒட்டியுள்ள கம்பி வேலி அருகில் ஐந்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கிடந்துள்ளதை பார்த்து, அரிசி ஆலை நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் அருண்பிரசாத் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக கிட்டங்கியில் இருந்த நெல் மூட்டைகளை சிலர் வாகனங்களில் வந்து திருடி சென்றுள்ளனர். ஆறு அடி உயர ேவலியை கடந்து உள்ளே சென்று திருடியுள்ளனர். ஆயிரக்கணக்கான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தில் இரவு காவலர்கள், சிசிடிவி கேமரா இல்லை. திருட்டு தொடர்பாக கலெக்டர் உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றனர்.

மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறுகையில், ‘‘ஏணி வைத்து ஏறி, வேலியை தாண்டி உள்ளே வந்துள்ளனர். 12 மூட்டைகள் திருடப்பட்டுள்ளன என்பது கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது. சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளோம். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்டங்கியில் சிசிடிவி கேமரா பொருத்தவும், இரவு காவலாளிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் நெல் மூட்டைகள் திருட்டு : மானாமதுரையில் துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Chipcott Industrial Estate ,Dinakaran ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...