×

கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம்

 

தர்மபுரி, ஏப்.26: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் \\”நான் முதல்வன்\\” திட்டத்தின் கீழ் கல்லூரிக்கனவு மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டி வருகிறது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, பள்ளி இடையில் நின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குகின்ற வகையில் மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 18, 19ம்தேதி சென்னையில் நடந்தது.

இதனை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பயிற்சிகள் நேற்று முன்தினம் (24ம்தேதி) முதல் வரும் 5ம்தேதி வரை நடக்கிறது. இதில் மாணவர்களின் நலன் மற்றும் முழு வளர்ச்சியில் தலைமையாசிரியர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணை தலைவர், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர், மேலாண்மை குழு கருத்தாளர், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட, தொடர் பங்களிப்பை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

நடப்பாண்டில் நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல், ஆலோசனை வழங்குதல் குழு வரும் 6ம் தேதி முதல் செயல்பட உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் இந்த ஆலோசனை குழுவை அணுகி உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளலாம்.

மேலும் இந்த குழுக்கள் இது போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பணிகளை சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் ரவிக்குமார், சம்பத்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் தெரேசாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

The post கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Avvaiyar Government Girls Higher Secondary School ,Dinakaran ,
× RELATED 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு