×

கழுகுமலை அருகே மக்கள் குறைதீர்க்கும் முகாம் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க அரசு திட்டங்களை பயன்படுத்துங்கள்

கழுகுமலை, ஏப். 26: கழுகுமலை அருகே நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பங்கேற்ற கனிமொழி எம்பி, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க அரசின் திட்டங்களை பயன்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். கழுகுமலை அருகே கே.குமரெட்டியாபுரம் பஞ். வெயிலுகந்தபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கனிமொழி எம்பி கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் 41 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அவர் வழங்கி பேசுகையில், இந்த பகுதியில் இருந்து சங்கரலிங்கபுரத்துக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது இச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. 75 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் பணிகள் நிறைவு செய்யப்படும்.

குடிநீர் குழாய் திறந்து விடுபவர் சரியாக வேலை செய்யவில்லை என புகார் வந்தது. அது சரி செய்யப்பட்டது. இந்த பகுதியில் தண்ணீர் விநியோகிக்கத்துக்காக ஆழ்துளை கிணறு அமைத்து, மோட்டார் பொருத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மிக விரைவில் செய்து தரப்படும். நீண்ட நாட்கள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளோம். மேலும் மக்கள் தந்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றி தருவோம். அரசாங்கம் அனைவருக்கும் பொதுவானது. அதேபோல் இங்குள்ள 5 சமூக நலக்கூடங்களை பொதுவாக, அனைவருக்கும் உரிமையுள்ள ஒன்றாக பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நாம் நினைக்கக்கூடிய, முதலமைச்சர் கனவு காணக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை உருவாக்க முடியும்.

அனைவருக்கும் அத்தனையும் கிடைக்க வேண்டும் என்ற நிலைபாட்டோடு, நாம் அரசு செய்யும் நமக்கான திட்டங்களை பயன்படுத்த வேண்டும், என்றார். முகாமில் அமைச்சர் கீதாஜீவன், கோட்டாட்சியர் மகாலட்சுமி, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணியன், பஞ். தலைவர் ராமசுப்பு, துணை தலைவர் சாந்தி, தாசில்தார் சுப்புலட்சுமி, கழுகுமலை பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், கயத்தார் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கழுகுமலை அருகே மக்கள் குறைதீர்க்கும் முகாம் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க அரசு திட்டங்களை பயன்படுத்துங்கள் appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai ,Kalkumalai ,Kanimozhi ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்