×

திடீர் தொழில்நுட்ப கோளாறால் கத்தார் விமானம் 368 பேருடன் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவுக்கு நேற்றுமுன்தினம் பிற்பகல் புறப்பட்டது. விமானத்தில் 356 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உள்பட 368 பேர் பயணம் செய்தனர். விமானம் சுமார் 39 ஆயிரம் அடி உயரத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சர்வதேச விமான நிலையத்தில், விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு தரையிறக்க அனுமதி கேட்டார்.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமையகத்தில் அனுமதி பெற்றனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர். தொழில்நுட்ப கோளாறை, விமான பொறியாளர்கள் குழுவினர் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக பணிகள் நடந்தது. பின்னர் இரவு ஜகர்தாவுக்கு புறப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடியாக எடுத்த நடவடிக்கையால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, 368 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

The post திடீர் தொழில்நுட்ப கோளாறால் கத்தார் விமானம் 368 பேருடன் சென்னையில் தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Qatar ,Chennai ,Qatar Airways ,Doha ,Jakarta ,Indonesia ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி...