×

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் குரங்குகள் அட்டகாசம்: பக்தர்கள் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் மற்றும் கிருத்திகை நாட்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது இக்கோயிலுக்குள் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களை குரங்குகள் அச்சுறுத்தி வருகிறது. கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன. மேலும், பக்தர்கள் கையில் கொண்டு வரும் தேங்காய், பழங்களை கண்டதும் குரங்கள் திடீரென பாய்ந்து வந்து பறித்து செல்வதோடு மட்டுமல்லாமல் காயப்படுத்தி விட்டு செல்கிறது. இதனால், பக்தர்கள் அச்சமடைகின்றனர்.

மேலும், பெரும்பாலான பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் பெற்றோருடன், மாணவர்கள், குழந்தைகள் அதிகளவில் கோயிலுக்கு வருகின்றனர். குரங்குகள் தொல்லையால் இவர்கள் கோயில் பிரகாரத்தை அச்சத்துடன் சுற்றிவருவதாக தெரிவிக்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களில் சிலர் உணவு வழங்குவதால் கோயிலை விட்டு குரங்குகள் செல்ல மறுப்பதாக கூறப்படுகிறது. எனவே, கோயிலில் சுற்றித்திரியும் குரங்குகளை விரட்டிவிட கோயில் நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் குரங்குகள் அட்டகாசம்: பக்தர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kumarakottam Murugan temple ,Kanchipuram ,Kumarakottam ,Kanchipuram… ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...