×

எடையூர் கிராமத்தில் புதிதாக நிழற்குடை கட்டித்தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: எடையூர் கிராமத்தில் உள்ள பழைய பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக நிழற்குடை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, கடம்பாடியில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை ஊராட்சியில் கட்டப்பட்டது. இதனை, முன்பு இருந்த ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் நிழற்குடையில் பல பகுதிகள் விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்து காட்சிப்பொருளாக காணப்படுகிறது.

மேலும், அந்த நிழற்குடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் உலாவருவதால் பயணிகள் அங்கு செல்லவே மிகவும் அஞ்சுகின்றனர். அந்த நிழற்குடை இன்றோ அல்லது நாளையோ இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அங்குள்ள, முதியவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் அமர்ந்து ஓய்வு எடுப்பதாக கூறப்படுகிறது. எனவே, குழிப்பாந்தண்டலம் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள நிழற்குடையை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக ஒரு நிழற்குடையை கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி முதியவர் ஒருவர் கூறுகையில், ‘குழிப்பாந்தண்டலம் ஊராட்சி எடையூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் நிழற்குடை வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஊராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோர் இந்த பாழடைந்த நிழற்குடையை முழுவதும் இடித்து விட்டு அதே இடத்தில் புதிய நிழற்குடை கட்டித் தர முன்வர வேண்டும் என்றார்.

The post எடையூர் கிராமத்தில் புதிதாக நிழற்குடை கட்டித்தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ediyur village ,Mamallapuram ,Edioor Village ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...