×

சிற்பமும் சிறப்பும்: ஆதிசங்கரர் கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

25.04.2023 – ஆதி சங்கரர் ஜெயந்தி

ஆலயம்: சங்கராச்சாரியார் கோயில், ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலம்.

காலம்: பண்டைய காஷ்மீரின் வரலாற்று ஆவணமாக விளங்கும் ‘ராஜதரங்கிணி’ நூலில் வரலாற்றாசிரியரான கல்ஹானா, இம்மலைக்கோயில் பொ.ஆ.மு.371ல் காஷ்மீர் மன்னர் கோபாதித்யா (பொ.ஆ.மு 426-365) என்பவர் கட்டினார் என குறிப்பிட்டுள்ளார். பின்னர், கர்கோடா வம்சத்தின் லலிதாதித்யா முக்தாபிதா (பொ.ஆ. பி 724-760) கோயில் வளாகத்தில் உள்ள கட்டமைப்புகளுக்கு பெரும் பங்களிப்பு களையும் பழுதுபார்ப்புகளையும் செய்தார்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள முக்கியமான வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று சங்கராச்சாரியார் கோயில். இப்பழங்கால ஆலயம், ஸ்ரீநகர் நகர மட்டத்திலிருந்து 1100 அடி உயரத்தில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. தால் ஏரிக்கரையில் இருந்து சுமார் 6.கி.மீ வாகனத்தில் பயணித்து, அதன் பின் 280 படிகள் ஏறி இந்த சிவாலயத்தை அடையலாம். பக்தர்கள் ஆலயத்தை சுற்றி வருகையில் ஸ்ரீநகர் நகரத்தின் அழகிய காட்சி கிடைக்கும். பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வாழ்விடமாகக்கொண்ட அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்த மலை, பல விலங்கியல் வல்லுநர்கள் மற்றும் உயிரியலாளர்களையும் ஈர்க்கிறது. பல்லுயிர் பெருக்கம் குறித்த ஆய்வு, ஆவணப்படுத்தலுக்காக அவர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

ஆதிசங்கரர்

பொ.ஆ.7-8 ஆம் நூற்றாண்டில் காஷ்மீருக்கு விஜயம் செய்த பெரிய துறவியும் தத்துவஞானியுமான ஆதிசங்கரரின் நினைவாக இந்த கோயில் பெயரிடப்பட்டது. ஆதிசங்கரர் அமர்ந்து தவம்புரிந்த ‘சங்கராச்சார்யா தபஸ்யா ஸ்தலம்’ இவ்வாலயத்திற்கு கீழே உள்ளது. ஆதிசங்கரர் தனது புகழ்பெற்ற இலக்கியப் படைப்பான ‘சௌந்தர்ய லஹிரி’யை இங்கு இயற்றியதாக நம்பப்படுகிறது.

ஆலயக்கட்டுமானம்

மலையின் மீது ஒரு பெரும் பாறையின் மேல் ஒவ்வொரு பக்கமும் சுமார் 15 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட 20 அடி உயர எண்கோண அடித்தளம் அமைக்கப்பட்டு, அதன் மேல் எண்கோண நெடுவரிசை புறச்சுவர்களுடன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. மையத்தில் 21 அடி விட்டத்தில் வட்ட வடிவ கருவறை 3.5 அடி அகல நுழைவாயிலுடன் உள்ளது. லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.

வரலாறு

பழங்காலத்திலிருந்தே புனிதமானதாகக் கருதப்படும் இக்கோயிலின் ஆரம்ப கட்டுமானத் தேதியை தொல்லியல்/ வரலாற்று ஆய்வாளர்களால் சரியாக வரையறை செய்ய இயலவில்லை. பண்டைய காஷ்மீரின் வரலாற்று ஆவணமாக விளங்கும் `ராஜதரங்கிணி’ நூலில் வரலாற்றாசிரியரான கல்ஹானா, இம்மலைக்கோயில் பொ. ஆ. மு 371 ல் காஷ்மீர் மன்னர் கோபாதித்யா (பொ.ஆ.மு 426-365) என்பவர் கட்டினார் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் கர்கோடா வம்சத்தின் லலிதாதித்யா முக்தாபிதா (பொ.ஆ. 724-760) கோயில் வளாகத்தில் உள்ள கட்டமைப்புகளுக்கு பெரும் பங்களிப்புகளையும் பழுதுபார்ப்புகளையும் செய்தார். இத்தகு பழம்பெருமை மிக்க இக்கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

The post சிற்பமும் சிறப்பும்: ஆதிசங்கரர் கோயில் appeared first on Dinakaran.

Tags : Adi Shankar Temple ,Kumkum Spiritual Sculpture and ,Adi ,Shankar ,Jayanti Temple ,Shankaracharya Temple ,Srinagar, Kashmir… ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு...