×

திருவிடைமருதூர் பகுதியில் பருத்தி வயலில் களையெடுப்பு பணி மும்முரம்

திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் தாலுகாவில் நடப்பு கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிரில் களையெடுத்து மற்றும் பாத்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது.திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த 92 கிராம ஊராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி நடைபெறுகிறது.

குறிப்பாக முட்டக்குடி, சிற்றிடையாநல்லுார், மணிக்குடி, கட்டாநகரம், அணைக்கரை, சாத்தனுார், தத்துவாஞ்சேரி, பட்டம், மாரச்சேரி, கீரங்குடி, சூரியனார்கோவில், திருமாந்துறை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் பருத்தி சாகுபடி நடைபெறுகிறது. இந்த ஆண்டு பருத்தி சாகுபடி கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கி நேரடி விதைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 2வது வாரத்தில் இருந்து பருத்தி அறுவடை பணிகள் தொடங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டுகளைவிட 2022ம் ஆண்டு பருத்திக்கு சராசரியாக நல்ல விலை கிடைத்துள்ளதால் சாகுபடி பரப்பளவு குறையாமல் ஆர்வமுடன் பருத்தி சாகுபடி செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பருத்தி பயிர்கள் ஒரு அடி உயரம் வரை நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இதனால் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் கடந்த சில நாட்களாக ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.மேலும் ஒரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் இடையில் உள்ள பாசன நீர் செல்லும் பாத்தியை சுத்தம் செய்துகளை எடுக்கும் பணியும் நடந்து வருகிறது.

The post திருவிடைமருதூர் பகுதியில் பருத்தி வயலில் களையெடுப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvidaimarudur ,
× RELATED திருவிடைமருதூரில் நூலகத்தை தரம்...