×

இயற்கை உரத்திற்காக வயல்களில் செம்மறியாடுகள் கிடைபோடும் பணி தீவிரம்

பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளில் மண்ணின் தன்மை மேம்படவும், இயற்கை உரத்திற்காகவும் வயல்களில், தென்னந்தோப்பு களிலும் செம்மறியாடுகளை கிடை போடும் பழக்கத்தை விவசாயிகள் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடியான குறுவை, சம்பா, தாளடி முடிந்த பிறகு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் தரிசாக போட்டு விடுவார்கள்.

இந்த காலங்களில் வயல்களில் செம்மறியாட்டு மந்தைகளை குறிப்பிட்ட சில நாட்களுக்கு கிடை போடுவது வழக்கம். செயற்கை உரங்களின் ஆதிக்கத்திற்கு முன்பு பெரும்பாலான விவசாயிகள் ஆட்டுக்கிடை போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு கிடை போடும் பழக்கம் குறைந்தாலும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் ஆங்காங்கே வயல்களில் கிடை போடப்பட்டுள்ளது.

ஆட்டுக்கிடை போடுவதற்காக ராமநாதபுரம் பகுதியிலிருந்து கீதாரிகள் ஆட்டுமந்தைகளை ஓட்டி வந்துள்ளனர். கிடை போடுபவர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டிபோட்டு ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகின்றனர். பட்டியில் அடைக்கப்படும் ஆடுகளின் சிறுநீர், கழிவுகள் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கிறது. கிடை போடுவதற்காக டெல்டா மாவட்டங்களுக்கு வரும் கீதாரிகள் விவசாயப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்கி விடுகின்றனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் விளங்குளம் பகுதியில் சாகுபடி பணிகள் முடிந்த நிலங்களில் ஆங்காங்கே ஆட்டுக்கிடை போடப்பட்டுள்ளது. ஆடுகளைக் கிடை போடுவதால் வயலுக்கு தேவையான இயற்கை உரம் கிடைத்து, அடுத்த சாகுபடியின் போது அதற்கான பலன் அதிகளவில் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிடை போடுபவர்களுக்கு ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் ஒரு இரவுக்கு ரூ.500 முதல் 2000 வரை கூலியாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களது வசதி, நில அளவுக்கேற்ப தேவையான நாட்களுக்கு கிடைபோட்டு அதற்கான தொகையை வழங்குகின்றனர். இரவில் கிடை போட்டு, பகலில் வயலில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விடுவதால் கீதாரிகளுக்கு தீவன செலவும் மிச்சமாவதோடு ஆடுகள் வளர்ந்து விற்பனைக்கு தயாராகும் போது நல்ல வருமானம் கிடைப்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆடு வளர்ப்பவர்கள் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

The post இயற்கை உரத்திற்காக வயல்களில் செம்மறியாடுகள் கிடைபோடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Peraoorani ,Thanjavur District Peravurani ,Sethubavasatram Union Areas ,South Nadu ,Dinakaran ,
× RELATED பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில்...