×

தூய்மைப் பணியை மேற்கொள்ள 322 ஊராட்சிகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள்-வெண்ணந்தூரில் அமைச்சர், எம்பி., தொடங்கி வைத்தனர்

ராசிபுரம் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மைப்பணிக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் திட்டத்தை, வெண்ணந்தூரில் அமைச்சர், எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.நாமக்கல் மாவட்டத்தில், 15 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 322 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இங்குள்ள கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் சுகாதார வசதியை மேம்படுத்தும் வகையில், அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சித்துறை மூலம், நம்மஊரு சூப்பரு என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, குப்பை சேகரிக்க அனைத்து ஊராட்சிகளுக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.

இவற்றை ஊராட்சிகளுக்கு வழங்கும் திட்ட துவக்க விழா, நேற்று ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூரில் நடந்தது. வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள 14 கிராம பஞ்சாயத்துக்களுக்கு, தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், குப்பை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள, எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. சின்ராஜ் எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கட்டனாச்சம்பட்டி, தேங்கல்பாளையம், தொட்டியவலசு, கல்லங்குளம், ஓ.சௌதாபுரம், நடுப்பட்டி, குட்டலாடம்பட்டி, மூலக்காடு, பல்லவநாயக்கன்பட்டி, ஆர்.புதுப்பாளையம், நெ.3.கொமாரபாளையம், ஆலாம்பட்டி, மதியம்பட்டி, பொன்பரப்பிபட்டி ஆகிய 14 கிராம பஞ்சாயத்துக்களுக்கு, தூய்மை பணிகளை மேற்கொள்ள தலா ₹2.50 லட்சம் மதிப்பில், மொத்தம் ₹35 லட்சத்தில் 14 எலக்ட்ரிக் வாகனங்களை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் வழங்கினர். இந்த விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, நாமக்கல் மாவட்டத்திற்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, போதமலை கிராமத்திற்கு சாலை அமைத்தல், நாரைக்கிணறு பகுதி மக்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளுக்கு, தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த வகையில், வெண்ணந்தூர் ஒன்றியத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2021-22ம் ஆண்டில் ₹231.34 லட்சத்தில் 39 பணிகளும், 2022-23ம் ஆண்டில் ₹187.34 லட்சம் மதிப்பீட்டில் 44 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் ₹204.52 லட்சம் மதிப்பீட்டில் 38 பணிகளும், 2022-23ம் ஆண்டில் ₹186.87 லட்சம் மதிப்பீட்டில் 31 பணிகளும், முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ₹10 கோடி மதிப்பீட்டில் 13 சாலைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் சாலைப்பணிகள், கழிவுநீர் பணிகள், குடிநீர் பணிகள், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

பின்னர், அத்தனூர் வன விரிவாக்க மையத்தில், தமிழ்நாடு வனக்காப்பு திட்டத்தின் கீழ், கிராம வனக்குழுவை சார்ந்த 38 பேருக்கு, தலா ₹10 ஆயிரம் வீதம் ₹3.80 லட்சம் மதிப்பிலான சுழல்நிதிக் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வெண்ணந்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் தங்கம்மாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, அட்மா குழு தலைவர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தூய்மைப் பணியை மேற்கொள்ள 322 ஊராட்சிகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள்-வெண்ணந்தூரில் அமைச்சர், எம்பி., தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Electric Vehicles ,Vennandur ,Rashipuram ,Vannandur ,Namakkal district ,Electric ,Vehicles ,Wannandur ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...