×

தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்ட துரோகி!: அதிமுக என்ற தொண்டு இயக்கத்தை தொழிலக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி..ஓ.பன்னீர்செல்வம் சாடல்..!!

சென்னை: அதிமுக என்ற தொண்டு இயக்கத்தை தொழிலக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் புகார் தெரிவித்திருக்கிறார். முப்பெரும் விழாவினை முழு வெற்றியடைய செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டு செய்வதற்காக துவங்கப்பட்டது என்பதையும், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் பாதுகாப்போடு வளர்க்கப்பட்டது என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தொண்டு என்பது சுயநலமின்றி பிறர் நலத்திற்காக உழைப்பது, தொழில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னலத்திற்காகச் செய்வது. தொழில் தொண்டாகலாம்.

ஆனால் தொண்டு தொழிலாகக்கூடாது. தொண்டைத் தொழிலாக்குவது துரோகத்திலும் துரோகம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தொண்டு இயக்கத்தினை ஓர் ஆணவக் கும்பல், ஒரு சர்வாதிகாரக் கூட்டம் தொழிலாக்கிவிட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; அந்த பதவிக்கு வருபவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் வகுக்கப்பட்ட விதியை குழிதோண்டி புதைத்து, புரட்சித் தலைவி அம்மா அவர்களை நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி ஒரு மாபாதகச் செயலை செய்து, தனக்குத் தானே மகுடத்தைச் சூட்டிக் கொண்டார் துரோகி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் துரோகத்தை செய்த சர்வாதிகாரியை கண்டித்தும், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் வகுக்கப்பட்டு, மாண்புமிகு அம்மா அவர்களால் காப்பாற்றப்பட்ட விதியை மீளக் கொண்டு வரவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சதிகாரக் கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் வண்ணமும் நேற்று திருச்சியில் முப்பெரும் விழா நடைபெற்றது. என்னுடைய அறைகூவலை ஏற்று, முப்பெரும் விழாவில் அலைகடலென திரண்டு வந்து கலந்து கொண்ட இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்தப் புரட்சி மாநாடு மாபெரும் வெற்றியடைய பாடுபட்ட எனதருமை கழக உடன்பிறப்புகளுக்கும், அரசியல் ஆலோசகர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், காவல் துறையினர், பத்திரிகைத் துறையினர், தொலைக்காட்சி நண்பர்கள், மேடை அமைப்பு, மின் வசதி, உணவு வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை மேற்கொண்ட பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்ட துரோகி!: அதிமுக என்ற தொண்டு இயக்கத்தை தொழிலக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி..ஓ.பன்னீர்செல்வம் சாடல்..!! appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisamy ,O.O. ,Pannerselvam ,Sadal ,Chennai ,Uthinakaka ,panneerselvam ,Thirty Festival ,Kudam ,Uthanakaka ,Pannerselvam Sadal ,
× RELATED தூத்துக்குடியில் முதல்வர்...