×

கொளுத்தும் வெயிலால் நீரின்றி வற்றும் உறைகிணறுகள்-குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் தாமிரபரணி ஆறு சமீபகாலமாக குறைவான தண்ணீரோடு செல்கிறது. கடந்தாண்டு நெல்லை மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளும் குறைந்த அளவு தண்ணீரோடு காட்சியளிக்கின்றன.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்னர் தற்போதே கொளுத்திவரும் கோடை வெயிலால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களில் 90% குளங்கள் நீரின்றி வறண்டுள்ளன. இதனால் பிசான சாகுபடியில் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சலும் கை கூடவில்லை. தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் காணப்படும் உறைகிணறுகள் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 15.45 அடியாக பரிதாப நிலையில் உள்ளது. சேர்வலாறு 38 அடியாக உள்ளது.

அணைகளில் குறைவான நீர் மட்டுமே உள்ள நிலையில், ஆற்றில் நீர்வரத்தும் போதிய அளவு இல்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள உறைகிணறுகள் வற்ற தொடங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் பெய்த மழையளவு இயல்பை விட 58 சதவீதம் பற்றாக்குறையாகும். இதனால் நெல்லையும், தாமிரபரணி ஆற்றுப்படுகையும் தண்ணீரின்றி சுருங்கி கொண்டே செல்கின்றன. நெல்லை மாநகருக்கே குடிநீர் சப்ளை செய்யும் கொண்டாநகரம், சுத்தமல்லி, திருமலை கொழுந்துபுரம் உள்ளிட்ட உறைகிணறுகளில் தண்ணீர் இல்லாத சூழல் காணப்படுகிறது.

ஆற்றுப்படுகையில் குழிகளை தோண்டி உறைகிணறுகளுக்கு தண்ணீரை வடிய வைக்கும் அவல நிலையும் உருவாகியுள்ளது. அக்னி நட்சத்திரத்திற்கு முன்பாக போதிய அளவு மழை பெய்யாவிடில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

கோடை மழை கைகொடுக்குமா?

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கோடை மழை பரவலாக மிதமாக பெய்துள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாங்குநேரியில் 5 மி.மீ. மழை பெய்துள்ளது. பாளையில் 3 மி.மீ., நெல்லையில் 1 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டில் 9 மி.மீ. என மழை அளவு பதிவாகி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் 15 மி.மீ., சங்கரன்கோவிலில் 20 மி.மீ., செங்கோட்டையில் 21.80 மி.மீ., சிவகிரி மற்றும் அடவிநயினாரில் தலா 20 மி.மீ., தென்காசியில் 9 மி.மீ. என மழை பெய்துள்ளது. இரு மாவட்டங்களிலும் மாலை நேரத்தில் கோடை மழைக்கான அறிகுறிகள் இருந்தாலும், மழையை விட கருமேகங்கள் திரண்டு, இடி சப்தமே அதிகம் கேட்கிறது. தொடர்ச்சியாக கோடை மழை பெய்தால் மட்டுமே வறட்சி சற்று தணிய வாய்ப்புகள் உள்ளன.

The post கொளுத்தும் வெயிலால் நீரின்றி வற்றும் உறைகிணறுகள்-குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Nolla ,Thoothukudi ,Virudhunagar ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...