×

450 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு 550 காளைகள் களம் இறங்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி

*அலகுமலையில் இன்று நடக்கிறது

திருப்பூர் : அலகுமலையில் 550 காளைகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர்.திருப்பூர் தெற்கு வட்டம் அலகுமலை ஊராட்சியில் இன்று (25ம் தேதி) ஜல்லிகட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் வினீத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போட்டி அமைப்பாளர்கள் போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு எந்தவிதமான ஊக்க மருந்துகளோ மற்றும் எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ செலுத்தக்கூடாது. காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் மற்றும் காளை சேகரிப்பு மையம் ஆகிய இடங்களில் சாமியானா பந்தல் அல்லது கூரை அமைத்து காளைகளை வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் காக்க வேண்டும்.

காளைகளை நுழைவு பகுதிக்கு அழைத்து வந்த பின்னர் தான், அதன் உரிமையாளர் மூக்கணாங்கயிற்றை அவிழ்த்து காளையை திடலில் அனுமதிக்க வேண்டும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அமைப்பாளர்கள், போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? என கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும் பட்சத்தில் கூர் பகுதிகளை மரக்கவசம் அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கால்நடை மருத்துவர்கள் மூலம் கூர் மழுங்க செய்யவும், காளைகள் விளையாட்டில் பங்கேற்கும் முன் ஓய்வாக இருக்க கட்டுத்தறை, தண்ணீர் வசதி செய்து காளைகளின் திடக்கழிவு மற்றும் சிறுநீர் கழிவுகளை அகற்ற போதுமான ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களை வாடிவாசல் முகப்பில் நிற்கவோ, காளைகள் திடலில் இருந்து வெளியேறும் பகுதியில் இடைமறித்து நிற்கவோ அனுமதிக்க கூடாது. காளைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், காளை சேகரிப்பு மையம் மற்றும் தேவைப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி நிகழ்வுகளை பதிவு செய்தல் வேண்டும். மேலும், போட்டி ஏற்பாடுகளை வருவாய்த்துறை, போலீசார், ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை, வட்டார போக்குவரத்து துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைத்து முன்னின்று இணைந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழுக்களும், 108 ஆம்புலன்சுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். போட்டி குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அப்போது, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பல்லடம்) சவுமியா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் குமார ரத்தினம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post 450 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு 550 காளைகள் களம் இறங்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : jallikattu ,Tiruppur ,grand jallikattu ,Alakumalai ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்