×

அரக்கோணம் அருகே தண்ணீர் தேடி வந்த 3 பெண் மான்கள் ரயிலில் சிக்கி பலி

அரக்கோணம் : அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 பெண் புள்ளி மான்கள் பரிதாபமாக பலியானது. வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்- திருத்தணி செல்லும் ரயில் மார்க்கத்தையொட்டி வனப்பகுதி உள்ளது. இங்கு, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் இங்குள்ள மான்கள் தண்ணீர் தேடி அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்கு வருகிறது. அப்போது, கிணற்றில் தவறி விழுந்தும், நாய்கள் கடித்தும், வாகனங்கள் மற்றும் கம்பி வேலிகளில் சிக்கியும் வன விலங்குகள் பலியாகும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், அரக்கோணம் அருகே நேற்று அதிகாலை கைனூர் ரயில்வே கேட் பகுதியில் 3 பெண் புள்ளிமான்கள் ரயிலில் அடிப்பட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்தது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்காடு வனசரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வன அலுவலர் சரவணபாபு உத்தரவின்பேரில் வனவர் துரைமுருகன், வன காப்பாளர் சுந்தரமூர்த்தி, அரக்கோணம் தாலுகா மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், புள்ளி மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தபோது அவ்வழியாக வந்த ரயிலில் சிக்கி இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அரக்கோணத்தில் இருந்து கால்நடை மருத்துவர் புவனேஷ்வர்குமார் வரவழைக்கப்பட்டு மான்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், மான்களை அதே பகுதியில் தீ வைத்து எரித்தனர். இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வனப்பகுதியை சுற்றி வேலி அமைக்க வேண்டும். மேலும், வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீரை தொட்டிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரக்கோணம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 மான்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

The post அரக்கோணம் அருகே தண்ணீர் தேடி வந்த 3 பெண் மான்கள் ரயிலில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Dinakaran ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...