×

அனைத்துலகும் வாழ வேண்டும்

ஸ்ரீராமானுஜரின் அவதார தினம் – 25.4.2023

“சித்திரையில் செய்ய திருவாதிரை” ஸ்ரீராமானுஜரின் அவதார தினம். இன்று சித்திரை வளர்பிறை பஞ்சமி (25.4.2023) என்பதால் அத்வைத சித்தாந்தம் அனைத்துலகும் பரப்பிய ஆதிசங்கரரின் ஜெயந்தியும்கூட. இந்த இரு மஹநீயர்களின் ஜெயந்தி உற்சவம், அவரவர் சம்பிரதாயப்படி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஸ்ரீராமானுஜர், அனைத்துலகும் வாழ வேண்டும் என்று இந்த உலகில் அவதரித்தவர். அவருடைய போதனைகள் எளிமையானவை. நம்மை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்பவை.

நம்முடைய மனதை தூய்மைப்படுத்துபவை. நம்மை இறைவனுக்கு அருகில் கொண்டு போய் சேர்ப்பவை. நம்முடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள், துக்கங்கள், சோகங்கள் எல்லாவற்றையும் துடைத்து எறியக்கூடிய ஆற்றல் ராமானுஜருடைய சரணாரவிந்தங்களுக்கு உண்டு. அவர் நமக்கு எத்தனையோ விஷயங்களை சொல்லிச் சென்றிருக்கிறார்.

அதிலே எட்டு விஷயங்கள் மிக முக்கியமானவை. அவற்றைப் பார்த்து ஆனந்தப் படப் போகிறோம். அவர் நமக்குச் சொல்வது:

1. எதற்கும் பயப்படாதீர்கள். பகவான் இருக்கிறார். அவருடைய திருவடிகளில் சரணடைந்துவிட்டால், உங்களுக்கு எந்தத் துன்பமும் வராது என்பதை ஓங்கி சொன்னவர் அவர்.

அதுமட்டுமின்றி அவரே ஒரு பங்குனி உத்திரத் திருநாளில், எப்படி குழந்தைக்கு உடம்பு சரி இல்லாவிட்டால் தாய் அதற்காக மருந்து குடிப்பாளோ அதைப்போல நமக்காக-நமக்கு வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நம் எல்லோருக்குமாக அவரே ரங்க திவ்ய தம்பதிகளை இந்த உலக மெல்லாம் வாழ வேண்டும் என்று சரணடைந்தார். அதுதான் சரணாகதி கத்யம்.

அன்னை குடி நீரருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ என்னே
எனக்கா எதிராசர் எல்லாம் செய்தால்
உனக்கது தாழ்வோ உரை

– என்பது ஆர்த்தி பிரபந்தம்.

2. இரண்டாவதாக அவர் சொல்வது, நீங்கள் எதை கடவுளுக்கு அளித்தாலும் அது புனிதமான பொருளாக மாறிவிடுகிறது. ஒரு சின்ன புஷ்பத்தை எடுத்து கடவுளுக்கு கொடுத்தால், அதை அவன் ஒரு மிகப்பெரிய பரிசாக ஏற்றுக் கொள்கின்றான். அதனால், நாம் என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பது முக்கியம். அவருடைய வாழ்க்கையிலேயே ஒரு நிகழ்வின் மூலமாக நாம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

நான்கைந்து சிறுவர்கள் தெருவிலே கோடு போட்டு, இதுதான் ரங்கம் கோயில்; இதுதான் பெருமாள்; இங்கேயேதான் அர்ச்சகர் பூஜை செய்கிறார்; இந்த கொட்டாங்கச்சியில் இருக்கக்கூடிய மண்தான் இன்றைக்கு பகவானுக்கு பிரசாதம்; என்றெல்லாம் பாவனை செய்து கொண்டு கோயிலில் எப்படி மந்திரங்கள் எல்லாம் நடக்குமோ அதைப்போலவே செய்து விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது, ராமானுஜர் அந்த வழியாக போகிறார்.

அவர்களில் ஒரு பிள்ளை ராமானுஜரை அழைத்து “ஜியரே! வாரும். வந்து பிரசாதத்தை வாங்கிக்கொள்ளும்” என்று சொன்னவுடன், அவர் ஏதோ விளையாட்டுப் பிள்ளைகள் அழைக்கிறார்கள் என்று நினைக்காமல், சாட்சாத் அந்த அர்ச்சகர் அழைப்பதாக நினைத்துக்கொண்டு தன்னுடைய இரண்டு கைகளாலும் அடியேன் என்று சொல்லி அந்த பிரசாதத்தை ஏற்றுக் கொண்டார் என்கிற வரலாறு உண்டு. நாம் எந்த பாவத்தில் இறைவனை அணுக வேண்டும் என்பது முக்கியம், என்று ராமானுஜர் சொல்லுகின்ற இரண்டாவது வார்த்தை.

3. மூன்றாவது வார்த்தை, ஆழ்வார்களில் அற்புதமான அருந்தமிழ் பிரபந்தங்களில் ஓரிரண்டு பாசுரங்களையாவது நீங்கள் பாடம் செய்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு மனச் சாந்தியைத் தரும். நிம்மதியைத் தரும். ஆழ்வார்கள் வேதத்தின் சாரமாக இந்த தமிழ்ப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதனை நீங்கள் தினசரி சொல்லுங்கள். உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தாருங்கள் என்பார். இதுஒரு எளிய வழி.

4. நான்காவதாக, கடவுளுக்கு அர்ப்பணிக்காத எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எல்லாம் அவருடையது. எது கிடைத்தாலும் அவனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்படி ஏற்றுக்கொண்டால் அது பிரசாதமாக மாறிவிடுகிறது. அதனுடைய தோஷங்கள் கழிந்து விடுகின்றன. ஒரு வாழைப்பழம் கிடைத்தாலும்கூட கிருஷ்ணார்ப்பணம் என்று அவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு பிறகு உண்ணுங்கள்.

5. ஐந்தாவதாக, நீங்கள் எப்பொழுதுமே உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் மானசீகமாக கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் இன்றைய நாள் அவனால் இயக்கப்படுகிறது. அது நல்ல விதமாக நடக்க வேண்டும். மானசீகமாக அவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்பார்.

6. ஆறாவதாக, இரண்டு பேரை நீங்கள் வணங்க வேண்டும். பெரியவர்களை வணங்கி ஆசீர்வாதம் பெறுவது என்பது மிகமிகமுக்கியம். பெரியவர்களில் இரண்டு பெரியவர்கள் முக்கியமானவர்கள்.

1. வயதில் பெரியவர்கள்

2. இன்னொன்று ஞானத்தில் பெரியவர்கள்.

“வயோ விருத்தா, ஞான விருத்தா” என்று சொல்லுவார்கள். ஒரு பத்து வயது பையனாக இருந்தாலும், ஞானத்தில், பக்தியில் செழுமை உள்ளவராக இருந்தால், அவரும் பெரியவர்தான். அவரையும் வணங்கி ஆசிபெறுவது என்பது ஒவ்வொரு பக்தருக்கும் மிக முக்கியமான ஒரு விஷயம் என்பது ராமானுஜரின் கோட்பாடு. ஒரு முறை திருமலை யாத்திரை செல்லும்போது ஒரு விவசாயியை வழி கேட்க, அவன் வழி சொல்கிறான். உடனே அவனை சேவித்தாராம். எம்பெருமான் இருக்கும் “திவ்ய தேசத்திற்கு வழி காட்டிய ஞானி அவன்” என்றாராம்.

7. ஏழாவதாக, வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது. இன்பமும் துன்பமும் கலந்தது. இன்பம் துன்பமாகவும், துன்பம் இன்பமாகவும் மாறிவிடுவதும் உண்டு. எனவே நீங்கள் இன்பம் வந்தாலும் குதிக்க வேண்டாம், துன்பம் வந்தால் துவண்டு போய்விட வேண்டாம். இரண்டையும் சம நோக்கோடு எடுத்துக் கொள்ளுங்கள். எதிலும் பதற்றப்படாதீர்கள். எல்லாவற்றிலும் நல்லது என்பது இருக்கிறது. அதை தேடிக் கண்டு பிடியுங்கள் என்பார். “சம துக்க சுக” என்று கீதையில் இதைத்தான் பகவான் கண்ணனும் பேசுகின்றார்.

8. எட்டாவதாக, அவர் சொல்வது தொண்டு. சர்வீஸ். (social service) பிறருக்கு நீங்கள் ஏதேனும் ஒரு உபகாரம் செய்யாமல் இறைவனை உணரும் சாத்தியமே இல்லை. உங்கள் சேவை பணம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்று தேவை இல்லை. அது இனிய சொற்களாக இருக்கலாம், உங்களிடம் இருக்கக்கூடிய ஒரு பொருளை அவர்களுக்கு பகிர்ந்து தருவதாக இருக்கலாம், நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் ஒரு பகுதியை அவருக்கு தருவதாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் தொண்டு என்பது மிகவும் முக்கியம்.

இந்த உலகம் இருப்பதே தூயநெறி சற்றே அங்கொன்றும் இங்கொன்றும் என இருப்பதால்தான். அடிப்படையில்தான் வைஷ்ணவன் என்று சொன்னாலே அவருக்கு தொண்டன் என்றுதான் பொருள். தொண்டு செய்து பரமனை அடைவது ஒன்றே வைணவம் காட்டும் வழி. கடவுளை அடைய வேண்டும் (அறிய வேண்டும்) என்று சொன்னால் பிறருக்கு தொண்டு செய்யுங்கள். நன்மை செய்யுங்கள். அது ஒன்றே உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும் என்றார் ராமானுஜர். ராமானுஜருடைய எட்டு கொள்கைகள் ஒன்றும் பின்பற்றுவதற்கு கடுமையான கொள்கைகள் அல்ல. எளிமையானவை. இதனைப் பின்பற்றினால் நாம் மிக அருமையான ஒரு வாழ்வை இந்த வையகத்தில் வாழமுடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post அனைத்துலகும் வாழ வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Incarnation Day ,Sri Ramanuja ,Sri ,Ramanuja ,Chitrai Varapirai Panchami ,
× RELATED பூசாரியிடம் துடப்பத்தில் அடி வாங்கிய பக்தர்கள்