×

கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 3.12 லட்சம் டன் கரும்பு அரவை

 

தர்மபுரி, ஏப்.25: தர்மபுரி மாவட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இதுவரை 3.12 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழையால், கரும்பில் சாறு பிழியும் திறன் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கோபாலபுரத்தில், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 4,150 கரும்பு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 600 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கரும்புகள் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரவை பருவத்திலும், ஒரு லட்சம் டன்னுக்கு மேல் கரும்பு அரவை செய்யப்படுகிறது.

லாபத்தில் இயங்கி வரும் இந்த ஆலை, தேவையான நிதி ஆதாரத்தையும் இருப்பு வைத்துள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 9ம் தேதி இந்த ஆலையில் கரும்பு அரவை தொடங்கியது. தினசரி 2 ஆயிரம் முதல் 2500 டன் வரை கரும்பு அரவை செய்யப்படுகிறது. நடப்பாண்டு சுமார் 3.50 லட்சம் டன் கரும்பு என்ற இலக்குடன் அரவை தொடங்கியது. இதுவரை 3.12 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் வரை கரும்பு அரவை செய்யப்பட உள்ளது. இந்த அரவை பருவத்தில் மே மாதம் மட்டும், சுமார் 50 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3.62 லட்சம் கரும்பு டன் அரவை செய்யப்பட உள்ளது. ஒரு டன் கரும்பில் 108 கிலோ முதல் 110 கிலோ வரை சர்க்கரை எடுக்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர் உள்பட மாவட்டம் முழுவதும் மழையின்மையால் வறட்சி நிலவியதால், கரும்பு சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது. இதனால் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கரும்பு வரத்து சரிந்தது. கரும்பில் சர்க்கரை பிழியும் திறனும் குறைந்தது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக, தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை நல்லமுறையில் பெய்தது. இதனால் பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர், பொம்மிடி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. கிணறு, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் தேங்கியதால், விவசாயிகள் பரவலாக கரும்பு சாகுபடி செய்தனர். சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, 10 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவு கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டிற்கு பிறகு, இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு, தமிழக அரசு ஊக்கத்தொகை ₹195 தருவதாக அறிவித்துள்ளது. இதனால், கரும்பு சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2016-2017ம் ஆண்டு, 3.50 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. அதன்பின் 2.69 லட்சம் டன் கரும்பு, 1.43 லட்சம் டன், பின்னர் ஒரு லட்சம் டன் கரும்பு என படிப்படியாக அரவை இலக்கு சரிந்தது. தற்போது சீதோஷ்ண நிலை மாற்றம், பருவமழை தொடர்ந்து பெய்ததால், கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டிற்கு பிறகு, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இதுவரை 3.12 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. அடுத்தமாதம் அரவையைச் சேர்த்தால், மொத்தம் 3.62 லட்சம் டன்னாகும். ஒரு டன் கரும்பு ₹3126.25 க்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது. தமிழகத்தில் கரும்புக்கு அதிக தொகை கொடுக்கும் ஆலையாக, சுப்பிரமணிய சிவா ஆலை உள்ளது. நல்ல மழை பெய்துள்ளதால், கரும்புகளில் சாறு பிழியும் திறன் அதிகரித்துள்ளது. தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ₹195 தருவதாக அறிவித்துள்ளதால், அடுத்த ஆண்டு கரும்பு சாகுபடி மேலும் அதிகரிக்கும்,’ என்றனர்.

The post கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 3.12 லட்சம் டன் கரும்பு அரவை appeared first on Dinakaran.

Tags : Gopalapuram Subramania ,Siva Cooperative Sugar Mill ,Dharmapuri ,Gopalapuram Subramania Siva Cooperative Sugar Factory ,Dharmapuri district ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...