×

யானைக்கவுனி பாலப் பணி தீவிரம்: 6 மாதத்தில் முடிக்க ஏற்பாடு

 

சென்னை: யானைக்கவுனி பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை 6 மாதத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை யானைக்கவுனி பாலம் 1933ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலம் வலுவிழந்து காணப்பட்டதாலும், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், அதை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி புதிய பாலம் அமைக்க முடிவு செய்தது.

ரயில்வே பாதை வழியாக பாலம் அமைப்பதால் தென்னக ரயில்வே ஒப்புதலுடன் மாநகராட்சியுடன் இணைந்து தலா 50 சதவீத பங்களிப்புடன் கட்டி முடிக்க திட்டமிட்டனர். இதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பே பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பால வேலை தொடங்கியது. பணிகள் தொடங்கினாலும் பல்வேறு காரணங்களால் மெதுவாக நடைபெற்று வந்தது. பால வேலை நடைபெறுவதால் அவ்வழியே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. யானைக்கவுனி பாலம் பேசின்பிரிட்ஜ் சந்திப்பை இணைக்கிறது.

இதனால் சென்னையின் மையப் பகுதி, புரசைவாக்கம், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து எளிமையாகும். தற்போது பால வேலை முடியாததால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியிருப்பதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்தனர். இதனால் எரிபொருள் செலவு, காலவிரயம், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை சந்தித்து வருவதாக கூறுகிறார்கள். இது தொடர்பாக தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘பல்வேறு காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது. குறித்த காலத்தில் பணியை முடிக்க முடியாமல் போனது. தற்போது வேலை வேகமாக நடைபெறுகிறது. இன்னும் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்,’’ என்றனர்.

The post யானைக்கவுனி பாலப் பணி தீவிரம்: 6 மாதத்தில் முடிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Yanikauni Bridge ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...