×

சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சாவூர் பெரியகோயில் தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

 

தஞ்சாவூர், ஏப்.25: தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மே1ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, பெரியகோயில் தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மே1ம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் அதிகாலை பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தியாகராஜர், கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள். அங்கு தியாகராஜர் – கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் திரளான பக்தர்களுக்கு மத்தியில் கோலாகலமாக வலம் வரும். தேரோட்டம் நடைபெறுவதையொட்டி நேற்று காலை தஞ்சை மேல வீதியில் உள்ள தேர்நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாவிலை தோரணங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து தேரில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சாவூர் பெரியகோயில் தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Panthalkal ,Chariot ,Thanjavur ,Periyakoil ,Chitrai Festival ,Thanjavur Periyakoil ,Periyakoil Chariot ,
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...