×

பெரியகுளம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

 

பெரியகுளம், ஏப். 25: பெரியகுளம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே எண்டப்புளி முருகமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் வசீகரன் (12). இவர் கடந்த ஏப்.23ம் தேதி மதியம் தனது நணபர்களான முத்துக்குமார் (14), பாண்டி செல்வம் (14) பிரசன்னா (14) ஆகியோருடன், அதே பகுதியை சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் தென்னந்தோப்பில் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். கிணற்றில் 70 அடி வரை நீர் தேங்கி இருந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் தெரியாத வசீகரனும் குதித்துள்ளார். நீச்சல் தெரியாமல் குதித்த வசீகரன் நீரில் மூழ்குவதை பார்த்த மற்ற மூன்று பேரும் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளானர். ஆனால் அதற்குள் வசீகரன் மூழ்கிவிட்டார்.

இதனை தொடர்ந்து சிறுவர்கள் சென்று தகவல் தெரிவித்து வசீகரனின் உறவினர்கள் கிணற்றில் உடலை தேடியும் கிடைக்கவில்லை. அடுத்த நடவடிக்கையாக பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் மூழ்கிய சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 70 அடி ஆழமுள்ள கிணற்றில் மூன்று மோட்டார்களை கொண்டு 40 அடி வரை நீரை வெளியேற்றிய பின்பு தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை 5 மணி நேர தேடுதலுக்கு பின்பு மீட்டனர். சிறுவனின் உடலை பெரியகுளம் காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பெரியகுளம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,
× RELATED வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியகுளம்...