×

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக ரூ.110 கோடி பண பரிமாற்றம் செய்ததால் செட்டிநாடு குழுமத்தின் 6 இடங்களில் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ரூ.110 கோடி பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, செட்டி நாடு குழுமத்தின் அலுவலகங்கள் உள்ள சென்னை, மும்பை உள்பட 6 இடங்களில் நேற்று சோதனை சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செட்டிநாடு குழுமம் இயங்கி வருகிறது. இந்த குழுமத்தின் கீழ் சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலை, மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, செக்யூரிட்டி நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

செட்டி நாடு குழுமம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, ஐதராபாத், மும்பை என அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.23 கோடி ரொக்கம், ரூ.700 கோடியளவுக்கு ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக ரூ.110 கோடி முதலீடு செய்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் ரூ.110 கோடி குறித்து அமலாக்கத்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இதைதொடர்ந்து செட்டி நாடு குழுமத்தின் மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் சென்னை எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் உள்ள அலுவலகம், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ராணி சீதை அலுவலகங்கள் என மொத்தம் 6 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வெகு நேரம் நீடித்த இந்த சோதனையில், ெவளிநாடுகளில் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா, எந்த நிறுவனத்தில் இருந்து பணம் அனுப்பப்பட்டது.

பணம் அனுப்பப்பட்ட நிறுவனம் உள்ளதா அல்லது போலி நிறுவனமா என்பது குறித்து சோதனையின் போது, செட்டிநாடு குழுமத்தின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சில கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட முதலீட்டு ஆவணங்கள் என்ன என்பது குறித்து முழுமையாக அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். செட்டி நாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வெளிநாடுகளில் சட்டவிரோதமாக ரூ.110 கோடி பண பரிமாற்றம் செய்ததால் செட்டிநாடு குழுமத்தின் 6 இடங்களில் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Chettinad Group ,CHENNAI ,Chetti Nadu Group ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...