×

காலி மது பாட்டிலை திரும்ப பெறுவது நாடு முழுவதும் அமல்படுத்தலாமே?..ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பன்னவயலைச் சேர்ந்த கலைராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தின் நீராதாரமாக அத்தாணி கண்மாய் உள்ளது. 5 ஆண்டுக்கு முன் இந்த கண்மாய் பகுதியில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பால் பின்னர் மூடப்பட்டது. தற்போது அதே பகுதியில் புதிதாக இரு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மிக அருகில் கோயில் உள்ளது. காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்களை கண்மாயிலும், விவசாய நிலங்களிலும் போட்டுச் செல்கின்றனர். எனவே, இரு டாஸ்மாக் கடைகளையும் அகற்றுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலில் உள்ளதே’’ என்றனர்.

அரசு தரப்பில், ‘‘இத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் பின்பற்றப்படுகிறது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டம் வெற்றிகரமான திட்டம் தானே. இதை தமிழ்நாடு முழுமைக்கும் அமல்படுத்தலாமே? எத்தனை மாவட்டங்களில் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது? மலைப்பகுதிகளில் மட்டும் அமல்படுத்தினால் போதுமா? காலி பாட்டில்களால் சமவெளிப்பகுதியில் பாதிப்பு ஏற்படாதா?’’ என்றனர். பின்னர் மனுவிற்கு ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 5க்கு தள்ளி வைத்தனர்.

The post காலி மது பாட்டிலை திரும்ப பெறுவது நாடு முழுவதும் அமல்படுத்தலாமே?..ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Kalairajan ,Pannawayal, Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாக்களில் பாகுபாடு காட்டக் கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து