×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு, இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ள ஐகோர்ட் கிளை, கைதாகி சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். சிபிஐ வக்கீல் முத்துசரவணன் ஆஜராகி, ‘‘மனுதாரர் மற்றும் காவலர்கள் அடித்ததால் ஏற்பட்ட காயத்தால் தான் இருவரும் இறந்தனர். மனுதாரர் மீதான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. மனுதாரர் உள்ளிட்ட கைதானோர் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் அடுத்தடுத்த மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். குறுக்கு விசாரணை என்ற பெயரில் பல நாட்கள் இழுத்தடிக்கின்றனர். இன்னும் 6 பேரிடம் மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 4 மாதத்தில் விசாரணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மனுதாரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்கப்படலாம். விசாரணையும் பாதிக்கும். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது’’ என வாதிட்டார். இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, ஒத்தி வைத்திருந்தார். இந்த மனுவின் மீது ேநற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.இளங்கோவன், சிபிஐ தரப்பு வாதத்தை ஏற்று ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரம் மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் இந்த கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு, இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Satankulam ,High Court Madurai Branch ,Madurai ,ICourt branch ,Sathankulam ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...