×

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை: 2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. கேபிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பங்குதாரர் என்கிற முறையில் இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் கடனாக பெற்றுள்ளனர். கடனுக்காக லிங்குசாமி கொடுத்த ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்க கோரியும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது காசோலை தொகையில் 20 சதவீதம் ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 20 சதவீத தொகையை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், லிங்குசாமிக்கு விதித்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

The post காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Lingusamy ,Chennai ,Karthi ,Samantha ,Lingusami ,Dinakaran ,
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா