×

சசிகலா, டிடிவி.தினகரன் என யாரும் மதிக்கவில்லை ஓபிஎஸ் மாநாடு தோல்வி; ரூ.20 கோடி வீணானது: கூட்டம் இல்லாததால் அப்செட்; சொந்த ஊரிலேயே ‘புஸ்’; வைத்திலிங்கம்-கு.ப.கிருஷ்ணன் குஸ்தி

திருச்சி: திருச்சியில் நேற்று மாலை நடந்த ஓபிஎஸ் மாநாடு தோல்வி அடைந்தது. பணம் கொடுத்தும் கூட்டம் இல்லாததால் அவர் அப்செட் ஆனார். செலவு செய்த ரூ.20 கோடி வீணானதுதான் மிச்சம் என ஆதரவாளர்கள் அங்கலாய்த்துள்ளனர். மேலும் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக தலைமையை கைப்பற்ற நினைத்த ஓபிஎஸ்சின் கனவை எடப்பாடி உடைத்ததால், அவருக்கு எதிராக திருச்சியில் தர்மயுத்த மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்று மாலை ஓபிஎஸ் அணி சார்பில் முப்பொரும் விழா மாநாடு நடந்தது. இதற்காக ஓபிஎஸ் அணியினர் பல்வேறு பில்டப்புகளை அள்ளி வீசினர். சசிகலா, டிடிவி.தினகரன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்கள் எல்லாம் வருவார்கள் என ஓபிஎஸ் கூறினார்.

ஆனால், சசிகலா, டிடிவி.தினகரன் என யாரும் ஓபிஎஸ் பக்கம் தலைகாட்டவில்லை. தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க முடியவில்லை. அதிமுகவை கைப்பற்றும் அனைத்து வழிகளும் கைவிட்டு போனதால், மாநாட்டில் பங்கேற்க யாரும் விரும்பவில்லை. ரூ.200,குவாட்டர் மற்றும் பிரியாணி, சப்பாத்தி ரோல் கொடுத்தும் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டத்தை கூட்ட முடியாததால் அப்செட்டில் உள்ளார் ஓபிஎஸ். மாநாட்டில் 20 ஆயிரம் நாற்காலிகளே போடப்பட்டதாக கூறப்படுகிறது. லட்சம் பேர் வருவார்கள் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில் 20 ஆயிரம் நாற்காலிகள் மட்டும் போட்டது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்த 20 ஆயிரம் நாற்காலிகளும் பாதிக்கு மேல் காலியாகத்தான் கிடந்தன.

குறிப்பாக, தேனி மாவட்டத்தில் இருந்து குறைவான வாகனங்களே வந்திருந்ததாக தெரிகிறது. தனது சொந்த மாவட்டத்தில் இருந்தே கூடுதல் ஆட்களை கொண்டு வர முடியாத நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு புஸ்வானம் போல் சரிந்துள்ளது. இதனால் தனது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் கடிந்து கொண்டாராம். இருப்பினும், ஓபிஎஸ் கொஞ்சம் அடக்கிதான் வாசித்தாராம். ஏன் என்றால், ஓபிஎஸ் ஆட்களை இழுக்க எடப்பாடி அசைன்மென்ட் கொடுத்து உள்ளதால், அணி தாவி விட போகிறார்கள் என்று கண்ணில் தண்ணீர் வராத குறையாக மனத்துக்குள்ளேயே குமுறி மவுனமாக இருந்தார். கூட்டம் சேராததால் மேடைக்கு ஓபிஎஸ் தாமதமாக வந்துள்ளார். அதற்குள்ளேயே மாநாட்டுக்கு வந்த பெரும்பாலானோர் நடை கட்டியதால், அவர்களுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநாடு நடந்த மைதானத்திற்கு திறந்த வேனில் ஓபிஎஸ் வந்தார். அவரை வரவேற்க தொண்டர்கள் இல்லாததால் இறுக்க முகத்துடன் காணப்பட்டார். பலர் சாலையில் நடுவே வாகனங்களை நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்சின் மேற்கூரை மீது ஏறி சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இந்த மாநாடு மூலம் தனது செல்வாக்கை நிரூபித்து காட்ட ஓபிஎஸ்சுக்கு ரூ.20கோடி வீணானது மட்டுமில்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது. முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு இடையே ‘யார் பெரிய ஆள்’ என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மேலும் அப்செட்டில் உள்ளார். நம்பி போனவர்களும் ஏமாற்றி விட்டார்கள். நம்பி இருந்தவர்களும் ஏமாற்றி விட்டதால் ஓபிஎஸ்சின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

* சி.வி.சண்முகம், ஜெயக்குமார் லூசு; துரோகி எடப்பாடிக்கு சாவு மணி-விரக்தியின் உச்சகட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு
மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெயலலிதா கழகத்தின் நிரந்தர பொது செயலாளராக இருந்தார். கழக விதிகளை மாற்றி அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய கபட வேடதாரி, அரசியல் வியாபாரி, நயவஞ்சக துரோகி எடப்பாடி பழனிசாமி. இந்த கல் நெஞ்சக்காரர்களை ஓட, ஓட விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அம்மா என்னை இரண்டு முறை முதல்வர் ஆக்கினார். 3வது முறை என்னை சின்னம்மா தான் முதல்வர் ஆக்கினார். என்னிடம் 3 முறையும் முதல்வர் பதவியை திருப்பிக் கேட்டார்கள். நான் திருப்பி கொடுத்து விட்டேன். ஐயா, எடப்பாடி பழனிசாமி, உங்களுக்கு முதல்வர் பதவியை சின்னம்மா தான் கொடுத்தார். புரட்சி தலைவரும் நீயும் ஒன்றா, அவருடைய கால் தூசிக்கு நீ வரமாட்டாய். போலி பொதுக்குழுவை நடத்தி அதில் 2 ஆயிரம் கேடிகளையும், ரவுடிகளையும் மண்டபத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

நான் எழுந்த போது, செட்டப்பு செய்து வைக்கப்பட்டு இருந்த அவர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ஒரு லூசு சிவி சண்முகம் நொட்டாங் கை உயர்த்தி தீர்மானத்தை ரத்து செய்கிறோம் என்று பேசினார். ஜெயக்குமார் ஒரு லூசு, அது பன்னீர்செல்வம் தனியாக நின்று டீ ஆத்திக்கொண்டு இருக்கிறார் என்று சொல்லுது. எடப்பாடி நம்பிக்கை துரோகத்திற்கு சாவு மணி அடிக்க வேண்டும். உங்களை நம்பி தான் தர்மயுத்தை துவங்கியுள்ளோம். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.எப்போதும் இல்லாத அளவுக்கு விரக்தியின் உச்சகட்டத்தில் உள்ள ஓபிஎஸ், தன்னிலை மறந்து எடப்பாடி, ஜெயக்குமார், சி.வி.சண்முகத்துக்கு எதிராக கடும் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* வேஷம் போடும் ஓபிஎஸ்
திருச்சியில் நடந்த மாநாட்டிற்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை வந்தார். அப்போது, திருச்சியில் இருந்து ஜல்லிக்கட்டு காளை ஒன்று அழைத்து வரப்பட்டது. காளையின் மூலம் ஓபிஎஸ்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அங்கு தயாராக இருந்த தொண்டர்கள் ‘ஜல்லிக்கட்டு நாயகன் வாழ்க’ என்று கோஷமிட்டனர். சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த ஓபிஎஸ், ‘ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான்’ என்று கூறினார். ஆனால், நேற்று ஜல்லிக்கட்டு காளையுடன் வந்து வேஷம் போடுகிறார் எனக்கூறி சொந்த கட்சியினரே ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என கிண்டல் அடித்தனர்.

The post சசிகலா, டிடிவி.தினகரன் என யாரும் மதிக்கவில்லை ஓபிஎஸ் மாநாடு தோல்வி; ரூ.20 கோடி வீணானது: கூட்டம் இல்லாததால் அப்செட்; சொந்த ஊரிலேயே ‘புஸ்’; வைத்திலிங்கம்-கு.ப.கிருஷ்ணன் குஸ்தி appeared first on Dinakaran.

Tags : Sasikala ,TTV.Thinakaran ,OPS convention ,Vaithilingam ,K.B.Krishnan ,Trichy ,OPS conference ,DTV.Thinakaran ,Vaithilingam-K.P.Krishnan ,Dinakaran ,
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...