×

சிட்னி கிரிக்கெட் அரங்கில் லாரா, சச்சின் நுழைவாயில்

சிட்னி: நட்சத்திர வீரர்கள் சச்சின் டென்டுல்கர், பிரையன் லாராவை பெருமைப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் அரங்கின் நுழைவாயிலுக்கு அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சச்சின் நேற்று 50வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரையும், லாராவையும் சிட்னி அரங்க நிர்வாகம் கவுரவித்துள்ளது. சிட்னி அரங்கில் சச்சின் 5 டெஸ்ட்களில் விளையாடி 785 ரன் குவித்துள்ளார். அவற்றில் 3 சதங்கள். அதிலும் 2004 ஜனவரியில் நடந்த டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 241 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிட்னியில் 1993ல் ஆஸி.க்கு எதிராக லாரா தனது முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக விளாசியதின் (277 ரன்) 30வது ஆண்டு இது. சிட்னியில் 4 டெஸ்ட்களில் விளையாடி உள்ள லாரா 384 ரன் எடுத்துள்ளார். இந்த 2 நிகழ்வையும் கொண்டாடும் விதமாகவே சிட்னி ஸ்டேடியத்தில் உள்ள ஒரு நுழைவு வாயிலுக்கு ‘லாரா – சச்சின் கேட்’ என பெயர் சூட்டியுள்ளனர். உறுப்பினர்கள் நுழைவாயில் மற்றும் டான் பிராட்மேன் நுழைவாயிலுக்கு இடையே அமைந்துள்ள கேட் இது. இதன் வழியாகவே வெளிநாட்டு அணி வீரர்கள் தங்களின் உடை மாற்றும் அறைக்கு செல்வர். ஏற்கனவே இந்த அரங்கில் ஆஸி. முன்னாள் நட்சத்திரங்கள் பிராட்மேன், ஆலன் டேவிட்சன், ஆர்தர் மோரிஸ் பெயர்களில் நுழைவாயில்கள் உள்ளன.

‘இந்தியாவுக்கு வெளியே எனக்கு பிடித்த விளையாட்டு அரங்கம் என்றால் அது நிச்சயம் சிட்னிதான். அங்கு எனது முதல் பயணத்தின்போது சிறப்பான நினைவுகள் உண்டு. வீரர்களுக்கான நுழைவாயிலுக்கு எனது சிறந்த நண்பரின் பெயருடன், எனது பெயரையும் வைத்திருப்பது பெரிய கவுரமாகும்’ என்று சச்சின் கூறியுள்ளார். ‘இந்தஅங்கீகாரம் கிடைத்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். சச்சின் எப்போதும் சிறப்பானவர். எஸ்சிஜி எனக்கும், எனது குடும்பத்துக்கும் பல சிறப்பான நினைவுகளை தந்துள்ளது. நான் ஆஸ்திரேலியாவில் இருக்கும் போதெல்லாம் சிட்னி அரங்கம் செல்வதை விரும்புவேன்’ என்று லாரா தெரிவித்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் சங்கம் மற்றும் எஸ்சிஜி தலைவர் ராட் மெக்கீச், சிறப்பு நுழைவாயிலுக்கான பெயர் பலகையை நேற்று திறந்து வைத்தார். ‘சச்சின், லாரா என 2 மகத்தான வீரர்களை இப்படி அங்கீகரிப்பது சரியான செயலாகும். சிட்னியில் சச்சின் சாதனை சிறப்பானது. லாராவின் முதல் டெஸ்ட் சதம் இரட்டை சதமாக மாறியதும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். இருவரும் எஸ்சிஜி மீது ஆழ்ந்த பாசம் கொண்டவர்கள். சிட்னிக்கு வரும்போதெல்லாம் மிகவும் கவனிக்கத்தக்கவர்களாக, பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்’ என்று எஸ்சிஜி நிர்வாகிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

The post சிட்னி கிரிக்கெட் அரங்கில் லாரா, சச்சின் நுழைவாயில் appeared first on Dinakaran.

Tags : Laura ,Sydney Cricket Arena ,Sachin Gateway ,Sydney ,Sachin Dendulkar ,Brian Lara ,Australia ,Sachin ,Gateway ,Dinakaran ,
× RELATED சேப்பாக்கத்தில் இன்று இந்தியா-தெ.ஆப்ரிக்கா மகளிரணி டி.20 போட்டியில் மோதல்