×

பாஜவை ஜீரோவாக்க வேண்டும் என்பதே இலக்கு எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை: நிதிஷ்குமாரை சந்தித்த பின் மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: ‘பாஜவை ஜீரோவாக்க வேண்டும். அதற்காக ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உடனான சந்திப்புக்குப் பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் மட்டுமின்றி பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வியும் சமீபத்தில் டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினர்.

இந்நிலையில், நிதிஷ் மற்றும் தேஜஸ்வி இருவரும் நேற்று கொல்கத்தா சென்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் 3 தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது: எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைப்பதில் எந்த ஈகோ மோதலும் இல்லை. நிதிஷ் குமாரின் ஒரே ஒரு கோரிக்கையை வைத்தேன். ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம் பீகாரில் இருந்து தொடங்கியது. அதே போல, பீகாரில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினால், அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கலாம்.

முதலில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை கொடுக்க வேண்டும். என்னை பொறுத்த வரையில், ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பாஜவை ஜீரோவாக்க வேண்டும். ஊடகங்களின் உதவியாலும், நாள்தோறும் அவர்கள் திணிக்கும் போலிக் கதைகளாலும் பெரும் ஹீரோவாக உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை. மாறாக, சொந்த விளம்பரத்தில் மட்டுமே அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இடம் பெற்றுள்ளன. இவ்வாறு மம்தா கூறினார். மம்தாவுடனான சந்திப்பு மிகச்சிறப்பாக அமைந்ததாக நிதிஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

* அகிலேஷுடனும் நிதிஷ் சந்திப்பு
மம்தாவை தொடர்ந்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ்வையும் நிதிஷ் குமார், தேஜஸ்வி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். லக்னோவில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின் கூட்டாக அளித்த பேட்டியில் நிதிஷ், ‘‘எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து முன்னோக்கி செல்வோம். அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறேன், கூட்டணிக்கு நான் தலைவராகும் நோக்கம் இல்லை’’ என்றார். அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றும் பிரசாரத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’’ என்றார்.

The post பாஜவை ஜீரோவாக்க வேண்டும் என்பதே இலக்கு எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை: நிதிஷ்குமாரை சந்தித்த பின் மம்தா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Mamata ,Nitish Kumar ,Kolkata ,Bajwa ,Bihar ,Dinakaran ,
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்